Tuesday, September 13, 2016

பாரதி பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

பாரதி பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி

கோவையில் 11.09.2016 அன்று நடைப்பெற்ற பாரதி பாசறை தொடக்க விழாவில் திரு ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பாரதி பற்றி பல அரிய தகவல்களை ஒன்றன்மீதொன்றாக சுவாரசியமும் உற்சாகமும் ததும்ப எடுத்துரைத்த போது மிகவும் பரவச நிலையை உணர்ந்தேன். மீண்டும் அவர் பேச்சை கேட்க வேண்டும் என்ற ஆவல் நெஞ்சில் குடி கொண்டு விட்டது youtube இல் தேடிய போது அவர் நேற்று ஆற்றிய உரையின் பொருள் படவே முன்னெப்போதோ ஆற்றிய இன்னொரு உரை கிட்டியது. அதன் துணை கொண்டு அவர் கூறிய கருத்துக்களை, நான் புரிந்து கொண்ட அளவில் , பிற அன்பர்கள் பயன்பெற  இங்கே பதிவிடுகிறேன் . தகவல் பெட்டகமாக, பெரும் எழுச்சி அருவி போல பொழிந்த அவர் உரையை வாய்ப்பிருப்பவர்கள் , கீழுள்ள சுட்டியில் கண்டு களியுங்கள். நான் தருவது சாரம் மட்டுமே.
Anaya vilakku Bharathy speech



# பாரதி 1904 எழுதி வெளியான முதல் கவிதை, 'தனிமை இரக்கம் ' வெளிவந்தது மதுரை கந்தசாமி கவிராயர் நடத்திய 'விவேக பானு' என்னும் இதழிலில். இவ்விதழ் கிருஷ்ணமூர்த்தி இடம் உள்ளது !!!

# பாரதி 1908 இல் வெளியிட்ட முதல் நூல் 'சுதேச கீதங்கள்'. இதை அவர் நிவேதிதா அம்மையாருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார். இதில் மதுரை முத்துகுமாரனார் எழுதிய 'என் மகனே' என்ற கவிதையையும் சேர்த்து வெளியிட்டது பாரதியின் பெருந்தன்மை.

# புதுமைப்பித்தன் கூறியது போல பாரதி உருவாக்கிய தலை சிறந்த படைப்பு பாரதிதாசன் . 'பாரதி கவிதாமண்டலத்தை சேர்ந்த கனக சுப்பு ரத்தினத்தின் கவிதை என்ற அறிமுகத்துடன் தாசனின் கவிதையை சுதேசமித்ரனுக்கு அனுப்பி வைத்தார் .

# திலகரை தலைவராக ஏற்றுக்கொண்ட தீவிரவாத வேகம் கொண்ட பாரதியும் வ உ சி யும் அண்ணி பெசண்ட்டின் மிதவாத போக்கையும்  தலைமையும் வன்மையாக எதிர்த்தனர். இந்த வெறுப்பின் அடையாளமே பாரதி எழுதிய ஆங்கில கட்டுரை ' the fox with a golden tail'. இந்த சிறு நூலின் ஆழமும் அர்த்தமும் கருதி நஞ்சுண்ட ராவ் என்பவர் தனக்கு 500 பிரதிகள் வேண்டும் என்று கேட்டிருந்தார். பாரதியோ தான் வலிந்து உருவாக்கிய பாஞ்சாலி சபதம் நூலை தீண்ட ஆளில்லை ஆனால் பொழுது போக்கிற்காக எழுதிய இந்த சிறு நூலிற்கு இத்தனை வரவேற்ப்பா என்று நொந்து அந்த வாய்ப்பை தீண்டவில்லை பாரதி.

# மிதவாத குழுவை சார்ந்த திரு வி கா பெசன்ட் ஆதரவாளர், அவர் நடத்திய தேசபக்தன் இதழில் பெசன்டை , அன்னை பெசன்ட் என்று குறிப்பிடுவார், இதை கண்டு பொறுக்காத பாரதி திரு வி கா விடம் ' என்னய்யா விளக்கெண்ணை முதலியாரே. அன்னை பெசன்ட், அந்நிய பெசன்ட் என்று போடும் ஐயா' என்று வெடித்து தள்ளுவாராம்.

# பாரதி படங்களில் காணப்படும் நெற்றி திலகம் ஓவியர் ஆரியா படங்களில்  இட்டது.

# பாரதி கனகலிங்கத்துக்கு பூணூல் இட்ட போது, 'ஏன் ஐயா , நீர் துறந்த பூணூலை அவருக்கு இடுகிறீர் என்று கேட்டதற்கு' , ' நான் பார்ப்பான் என்று இந்த உலகறியும், இவனும் பார்ப்பான் என்று அறிவிக்கவே இது என்றாராம்'

# பாரதி கவிதைகள் அரசுடைமை ஆக்கப்பட்டு அரசு அவர் புத்தகங்களை வெளியிட்ட போது அவை 6 ரூபாய் விலையிட பட்டிருந்தன. அப்பொழுது முதல்வராக இருந்த காமராஜர் ஆயிரம் விளக்கு பகுதியில் புத்தக கடை வைத்திருந்த சக்தி வை கோவிந்தன் அவர்கள் கடைக்கு வந்திருந்த போது, கோவிந்தன் முதல்வரிடம் பாரதி புத்தகங்களின் விலை அதிகம் என்று வாதிட்டாராம் . காமராஜரும் பதிலுக்கு முடிந்தால் நீரே மலிவாக போடுங்கள் என்று கூறிவிட்டாராம். இதற்காகவே கோவிந்தன் பாரதி கவிதைகளை அரை ரூபாய்க்கு விற்று தீர்த்தாராம்.

# அண்ணா ஸ்ரீ மகள் என்ற பதிப்பகம் நடத்தியுள்ளார் , அதன் வெளியீடாக 'உலக கவி பாரதி' என்ற நூல் வெளி வந்துள்ளது.

# பாரதியின் இந்தியா சிகப்பு தாளில் வெளிவந்தது.






No comments: