Wednesday, November 2, 2016

விடம்பனம் - நாவல்

விடம்பனம் - நாவல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில், வீரசோழன் ஆறு தன் தடத்தில் இருந்து விலகி வளைந்து ஓடும் ஓர் இடத்தில் முக்கோண வடிவில் அமைந்த ஒரு சிறிய கிராமத்தை களமாக கொண்டு, அதன் மாந்தர்களின் கலவு , களிப்பு, காதல் மற்றும் கொண்டாட்டங்களின் வழி, சில பத்தாண்டுகளுக்கு முந்திய தமிழ் கிராம வாழ்வின் கூறுகளை அழகாய் தீட்டி கண்முன் விரித்தபடி பேசுகிறது இந்த நாவல்.

 இன்னும், பெண்தெய்வ வழிபாடு, கலவு போன்ற அம்ஸங்கள் சங்க காலத்தில் இருந்து தொடரும் ஆதி தமிழனின் வாழ்க்கைக் கூறுகளைப் பிரதிபலிக்கும் வண்ணம், ஒரு கொண்டாட்டமான வாழ்க்கை சித்திரத்துடன் நாவல் தொடங்குகிறது. அங்கதம், பகடி, கேலி  இல்லாத கொண்டாட்டமா, அவை தாராளமாகவே ஆசிரியருக்கு துணை வருகின்றன.

இப்படி கொண்டாட்டங்களால் கட்டமைக்கப்படும் ஒரு கிராம வாழ்க்கை,  காலவெளியில் எப்படி திசைமாறுகிறது என்பதை களம் மற்றும் மனங்களின் சிதைவுகளாக  விரித்து சொல்கிறது இந்த நாவல். சமுதாயத்தின் காலப் பெருவெளியில் ஏற்படும்- திராவிட கட்சிகளின் அரசியல், இடதுசாரி தீவிரவாதம், பொருள் முதல்வாதம் போன்ற பெரும் மாற்றங்களை எதிர் கொள்ளும் சிறு பாத்திரங்கள் எவ்வாறு இவற்றை எதிர்கொள்கின்றன என்பது கதை.

இந்நாவலின் மூலம் 'தமிழ் நாவல்' உலகில் பல புதுமைகளை சாதித்து விட வேண்டும் என்ற ஆசிரியரின் முனைப்பு தெளிவு. அவர் தேர்ந்தெடுத்துள்ள கதைக்களம் நம் அண்மை வரலாற்றில் இன்றும் நம்மை பாதிக்கும் விஷயங்களை எடுத்தாண்டுள்ளது முத்தாய்ப்பு, பெரும் பாராட்டுக்குரியது.

களம் மட்டும் புதுமை அல்ல, கதை சொல்லும் முறையிலும் அநேக புதுமைகளை ஆசிரியர் சாதித்துளளார். நான்கு விதமான குரல்கள் பின்னியபடி நாவலின் சரடு உருவாகிறது.

டைரி குறிப்புகள் போன்ற அம்மாஞ்சியின் குரல், டீக்கடை பெஞ்ச் போன்ற வாசகர் வட்டத்தின் குரல், 'அவள், இவள்' கதைகளை கூறும் எண்பது- தொண்ணூறுகளின்  நாவல் மொழி குரல் மற்றும் 'தமிழ்வாணன்- மணிமொழி' இவர்களின் கதையை கூறும் அறுபதுகளின் நாவல் மொழி குரல். இப்படியாக மொழி, நடை என பல சாத்தியங்களை சோதித்து வெற்றி கண்டுள்ளார்.

ஒவ்வொரு குரலிலும் ஒவ்வொரு விதமான சுவை சாத்தியமாகி உள்ளது. அம்மாஞ்சியின் குரலில் வாழ்க்கையை நிதானித்து அலசும் பாங்கும்; வாசகர் வட்டம் நடையில் பகடியும் கிண்டலும் நிறை தளும்புகிறது; ' அவள்-இவள்' பகுதிகளில் மொழியில் கவித்துவம் பல இடங்களில் பிரகாசிக்கிறது; மணிமொழி பகுதிகள் ஒரு சமுதாய மாற்றத்தின் பதிவாக ஒளிர்கின்றன.

'அவள்- இவள் ' பகுதியில் கதாபாத்திரங்களுக்கு பெயர் சூட்டாமலேயே அவை நம்மை பாதிக்க செய்துவிடுவது ஆசிரியரின் மற்றுமொரு  சோதனைக்கு கிடைத்த பெரும் வெற்றி. 'அவள்- இவள்' என்ற நடை நமக்கு சலிப்பு தட்டும் போது,நாவலின் நடுப்பகுதியில் 'மணிமொழி தமிழ்வாணன் பெயர்கள் அறிமுகம் ஆகும் போது, அந்த பெயர்களை வாசக மனம் கொண்டாட செய்வதும், ஆசிரியரின் உத்திக்கு வெற்றியே.

இந்த உத்திகளின் சோதனைக் களம் தான் இந்த நாவலா ? அல்ல, ஆசிரியர் தான் பிரியத்துடன் பார்த்து வளர்ந்த ஒரு  கொண்டாட்டமான வாழ்க்கை முறை எங்கே தொலைந்தது, எப்படி அழிந்துபோனது என்று தேடும் முயற்ச்சியே இந்த நாவல்.

ஆம், இலவசங்களும் வணிகமயமும் எப்படி நம்மை ஒருவர் மீதொருவர் நம்பிக்கை அற்றவர்களாகவும், போட்டியாளர்களாகவும் சிதைத்துள்ளதை இந்த நாவல் படம் பிடித்து செல்கிறது. இது ஒரு விறுவிறுப்பான கதை ஓட்டம் கொண்ட நாவல் அல்ல. சற்றே நிதானித்து அனுபவித்து உள்ளீடான பல செய்திகளை உணர வேண்டிய நாவல் இது.

அனுப்பம் சூத் இன் ஓவியங்கள் ஆசிரியரின் மொழி நடைக்கு பெரிதும் துணை நிற்கின்றன. அவை கதைகளின் காட்சிகளை படம் பிடிப்பவை இல்லை அவற்றின் உணர்ச்சிகளையும் கிளர்ச்சிகளையும் பிரதிபலிப்பவையாக உள்ளன.

அனுபம் சூத் இன் படைப்புகள் மட்டுமல்லாமல், கூளப்ப நாயக்கன் காதல் உரை, நாலடியார், இ பா வின் நந்தன் சரித்திரம் நாடக பாடல் , காலச்சுவடு கவிதைகள், ஓவியர் ஜி பிரபாகர்  என்று தன்னை பாதித்த பல படைப்புகளையும் நாவலின் போக்கில் அழகாக சுட்டி இந்த நாவலுக்கு மேலும் மெருகூட்டுகிறார் ஆசிரியர்.

காமுட்டி கோயில், பிடாரி வழிபாடு, காமன் கூத்து,மர்பி ரேடியோ, ஆல மரம், புளிய மரம்,  கோயில் ஒத்த லைட் , என்று ஒரு அழகிய கிராமிய சூழலையும் கலாச்சாரங்களையம் பதிவு செயதிருப்பது இந்த நாவலின் இன்னொரு சாதனை. மேலும் கிராமங்களுக்கே சிறப்பு உரித்தான சுதந்திர மனம் படைத்த பெண் பாத்திரங்களின் மூலம் கதையை நகர்த்தியிருப்பது இன்னொரு சிறப்பு.

மாயூர பகுதி மொழி நடை முதல் முறையாக(?) ஒரு படைப்பில் பதிவு செய்யப் பட்டிருப்பதில், 'சப்பளம் கொட்டி' போன்ற பேச்சு மொழி சொற்கள் கையாளப் பட்டிருப்பதில் எனக்கு தனிப்பட்ட மகிழ்ச்சி.

இப்படி பல சிறப்புகளுடனும் ஒரு அழகிய கட்டுமானத்துடனும் எண்பதாவது அத்தியாயம் வரை வளரும் நாவல், அதற்க்கு அடுத்த அத்தியாயம் முதல் ஒரு கட்டு தளர்ந்த ஒரு வழுக்கு முகமாக சரிகிறது, கடைசி சில அத்தியாயங்களில். அதுவரை அனுபவித்து ரசித்து வந்த வாசகனுக்கு அங்கே ஒரு சறுக்கல் மற்றும் ஏமாற்றம் ஏற்படுகிறது.

முதல் எண்பது  அத்தியாயங்களில் கட்டி வளர்த்த அழகிய சித்திர உலகம் கசக்கி தூர எறியப்பட்டு ஒரு 'முகநூல் பிரஸ்தாபம்' தர நடையாக நாவல் மலிந்து விடுகிறது. கடை அத்தியாயங்களில் வரும் விஷயங்கள் தனியே களம் அமைத்து விரிவாக எழுதப்பட வேண்டியவை என்பதில் ஐயமில்லை. ஆனால், அவை முதல் என்பது அத்தியாயங்களோடு பொருந்தாமலும், வாசகனின் அனுபவத்தை சிதைத்து கலைக்கும்  விதமாகவும் அமைந்து விடுவது  ஏமாற்றமே.

இந்த ஒரு சிறிய இடறல் வராமல் இருந்திருந்தால், தமிழ் இலக்கிய பயணத்தை ஒரு புது தடத்திற்கு இட்டுச்சென்ற நாவல் என்று இந்த நாவலை கொண்டாடியிருப்பேன்.

ஸ்ரீநிவாசன் நடராஜன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும்.

No comments: