Wednesday, June 12, 2019

எழுத்தாளனைக் கொண்டாடுவது - 1

எழுத்தாளனைக்  கொண்டாடுவது- 1

சமீபத்தில் நடந்தேறிய, நான் பங்கு கொள்ளும் பாக்கியம் பெற்ற  இரு நிகழ்வுகள் மனதுக்கு மிகவும் இனியனவாகவும் , நாளெல்லாம் அமர்ந்து திளைக்கும்படியும் , தமிழ் இலக்கியம் குறித்த ஆரோக்கியமான அதிர்வுகளாகவும் அமைந்திருந்தன. அவற்றைப் பற்றி இங்கே விரித்திட விழைகிறேன்.

இவை இரண்டுமே எந்த ஒரு அமைப்பு ரீதியாக இல்லாமல், வாசகர்களின் முன்னெடுப்பால்  நிகழ்ந்தவை என்பது ஒரு சிறப்பு, அதிலும் இரு நிகழ்வையும் முன்னின்று ஒருங்கமைத்து அரங்கேற்றியது பெண்கள் என்பது கூடுதல் சிறப்பு. ஒன்று லாவண்யா சுந்தர்ராஜன் முன்னெடுப்பில்  கோவையில், ஏப்ரல் 20 2019 அன்று ஒருங்கமைக்கப்பட்ட  'எழுத்தும்  எண்ணமும்' என்ற எம் கோபாலகிருஷ்ணனின் படைப்புகளைக் குறித்த ஒரு நாள் கருத்தரங்கு. ஒரு ஜொலிக்கும் நட்சத்திர எழுத்தாள பட்டாளத்தையே இந்நிகழ்வில் அணிவகுக்கச் செய்தது மனதுக்கு மிகவும் இனிமையாக அமைந்தது. அணிவகுப்பு குறித்த விவரங்களை  அரங்கின் அழைப்பிதழை கண்ணுற்று இன்புறுக. இது போதாதென்று நிகழ்வை சிறப்பிக்க பார்வையாளர்களாக வந்து அமர்ந்து நிகழ்வை ரசித்து களித்த ஜெயமோகன் மற்றும் பி ஏ கிருஷ்ணன் ஆகியோரது வருகை நிகழ்வுக்கு இன்னும் சுவை கூட்டியது . கோணங்கள் ஆனந்த் முதலியோருடன் கண்டு உரையாட அமைந்த வாய்ப்பு மேலும் சிறப்பு.


நிகழ்வுக்கு தாமதமாக சென்ற காரணத்தால் பெரிதும் ஆவலுடன் எதிர்நோக்கிய சுகுமாரன் மற்றும் யூமாவின் உரைகளை தவற விட்டுவிட்டேன். மொழியாக்கங்கள், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள், நாவல்கள் என்று M G யின் இலக்கிய செயல்பாடுகளை முழுமையாக அலசும் வகையில் தனி தனி அமர்வுகளாக அமைந்தது ஒருங்கமைப்பின் சிறப்பு. மேலும் ஒவ்வொரு அமரவும் குறிப்பிட்டிருந்த நேரப்படி தொடங்கி நிறைவுடன் முடிந்தது கூடுதல் சிறப்பு.





MG யின் எழுத்துக்களை ஒரு அறிமுகம் செய்து கொள்ளும் விதமாக அவரது முனிமேடு சிறுகதை தொகுப்பில் இருந்து ஓரிரு கதைகளை படித்து விட்டு சென்றிருந்தேன். எனக்கு அந்த கதைகளில் பெரிதாக லயிப்பு ஏற்படவில்லை. மேலதிக வர்ணனைகளால் ஒரு வித திகட்டும் ஒரு எழுச்சியோ சோதனைகளோ ( அதற்கான வாய்ப்புகள் இருந்தும்) நிகழாத ஒரு தட்டையான களமாக தோன்றியது. அந்த தொகுப்பின் முன்னுரையில் தேவதேவன் சிலாகித்திருந்தது நான் மெய்யுணர முடியா மிகையாக தோன்றியது.

ஆனால் சிறுகதை அமர்வில் இந்த தொகுப்பைப் பற்றி பேசிய கந்த சுப்பிரமணியம் அவர்களின் உரை , கதைகளை சிலாகித்து எடுத்துரைத்த முறை என்னை மீண்டும் வாசிக்க செய்ய தூண்டின. நினைவில் நின்ற கவிதைகள் என்று MG கவிதைகள் வாசிப்பு அறிமுகம் செய்யும் விதமாக எழுதியுள்ள நூல் குறித்து மகுடேஸ்வரனின் உரை மூலம்  அறிந்துகொண்டது ஆர்வத்தை தூண்டியது.
மகுடேஸ்வரன், மோகனரங்கன், நாஞ்சில், பாவண்ணன், சு வே  முதலியோர் பேசும் போது MG உடனான அவர்களது நீண்ட மற்றும் ஆழ்ந்த நட்பு மேலோங்கி வியக்கச் செய்தது. பலரது நினைவு கூறல்களின் வழியே அண்ணாச்சி என்ற தமிழினி வசந்தகுமார் பற்றிய ஒரு சித்திரம் பின்புலத்தில் தொடர்ந்து வளர்ந்தபடி இருந்தது.

MG தனது ஏற்ப்புரையில் சொல்வனம் இதழுக்காக ஜெயமோகனுடன் பணியாற்றியது தனது எழுத்து பயணத்தில் ஒரு முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிட்டார். 90 களில் திருப்பூர் அருகே ஒருங்கமைக்கப்பட்ட எழுத்தாளர்கள் முகாம் ஒன்றில் ஜெயமோகன், நாஞ்சில், பாவண்ணன் முதலியோருடன் உண்டான அறிமுகம் பற்றி அவர் அவர் உரைகளில் தனித்தனியே குறிப்பிட்டனர்.
MG யின் கதைகளில் பெண்கள் மற்றும் அவர்களது எண்ண ஓட்டங்களை மிக தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளதை தனிச்சிறப்பம்சமாக அனைவருமே எடுத்துக்காட்டினார்கள் , அந்த அம்சம்  தான் வளர்ந்த கைத்தறி நெசவாளர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியில், அவ்வீட்டு பெண்களின் சம்பாஷணைகளை அதிகம்  கேட்டு வளர்ந்த வாய்ப்பு அமைந்ததால் இருக்கலாம் என்று MG தெளிவு படுத்தினார்.
MG யின் காமம் குறித்த சித்தரிப்புகள் விரசங்கள் இல்லாமல் இலக்கிய அமைதியுடன் அமைந்த பாங்கை அனைவருமே பாராட்டினர்.

கொஞ்சம் கறாரான விமர்சன உரைகளுக்கு பெயர் பெற்ற K N செந்தில், ஏனோ இந்நிகழ்வில் மிகவும் தட்டையாக எந்த ஊக்கமும் உற்சாகமும்   இன்றி உரையை வாசித்ததாக தோன்றியது. நான் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழினி மின்னிதழ் ஆசிரியர் கோகுலின் உரையும் ஏமாற்றும் விதமாக அமைந்தது. கோகுல் தான் படித்துக்கொண்டிருக்கும் நிக்கோலே தலெப் இன் அளவுகோலின் படி எப்படி மணல்கடிகை ஒரு சிறந்த நாவல் என்று தான் அறிவதாக கூறி அமைந்து விட்டது சற்று ஏமாற்றம் தருவதாக இருந்தது. ஆனால் கோகுல் முன்வைத்த தலேபின் அளவுகோலை கோகுலின் பின் பேச வந்த அனைவரும் ஏற்றுக் கொண்டு உரையில் புகுத்தியது எனக்கு வியப்பூட்டியது.


நிகழ்வுக்கு வருகை தந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறியது மிகவும் கனிவான ஒரு அம்சம். உணவு இடைவேளைக்குப்  பின் ஹிந்துஸ்தான் கல்லூரி மாணவர்கள் MG யின் சில சிறுகதைகளை நாடகங்களாக அரங்கேற்றினர். இரு மாணவர்கள்- கட்டியக்காரன் போன்ற பாத்திரத்தில் தோன்றிய ஒரு நடிகனும், பள்ளி சிறுமி வேடத்தில் தோன்றிய ஒரு நடிகையும் சிறப்பாக நடித்திருந்தனர், காட்சியை தங்கள் தோள்களில் உயர்த்தி பிடித்தனர்.

ஒரு எழுத்தாளனுக்கு விருதுகளை விட இதுபோன்ற அவன் படைப்புகளை சக எழுத்தாளர்களால் விரிவாக பேசப்படும், கொண்டாடும்  நிகழ்வுகள் பன்மடங்கு நிறைவையும் மகிழ்ச்சியையும் தரும் என்ற கருத்தை என் மனதில் ஆழமாக விதைத்த அழகான நிகழ்வு இது.

நிகழ்வை சிறப்பாக ஒருங்கமைப்பதில் முன்னின்ற லாவண்யா ஏனோ தன்னை முன்னிறுத்திக்கொள்வதில்லை என்பதில் மிகவும் அதிகவனத்துடன் இருந்தார் என்பது ஒரு உறுத்தலாக இருந்தது.. வெகு சுலபத்தில்  அகந்தைகள் பெருத்து உரசிக்கொண்டு குழுக்களாக உடைந்து சிதறிவிடும் தமிழ் இலக்கிய உலகில் இதுபோன்று அதிகவனத்துடன் செயல்படுவது அவசியமாகிறது என்று தோன்றுகிறது.

குறிப்பு : படங்கள் லாவண்யா சுந்தரராஜன் facebook பக்கத்தில் இருந்து எடுத்தாளப்பட்டுள்ளன .

No comments: