Wednesday, June 12, 2019

எழுத்தாளனைக் கொண்டாடுவது - 2

எழுத்தாளனைக் கொண்டாடுவது - 2

 சென்னையில் 8 ஜூன் 2019 அன்று பெருந்தேவியின் முன்னெடுப்பில் அரங்கேறிய பூமணியை வாசித்தல் என்ற ஒரு நாள் நிகழ்வை குறித்தும் அது என்னுள் கிளர்த்திய சிந்தனைகள் குறித்தும் இங்கே பகிர்ந்துட விழைகிறேன்.
சமீப காலமாக புத்தகங்களை ( நாவல்களை தான்... இது வரை ஆங்கில நாவல்களுக்கு தான் இந்த வாய்ப்புக்  கூடியுள்ளது .. Milkman வாசிப்பில் ஆழ்ந்த போது தொடங்கியது இந்த அரிப்பு ) வாசிக்கும் போது அருகே ஒரு தாளை வைத்துக்கொண்டு குறிப்புகள் எடுப்பது என்பது வாடிக்கையாகி உள்ளது. தமிழ் நாவல்களில் அதிலும் பூமணியின் எழுத்துப்பரப்பில் ஆழ்ந்தவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள நிச்சயம் ஏதும் இருக்கும் என்ற ஆவலில் இந்நிகழ்வை எதிர்நோக்கினேன். பெருந்தேவியின் ஆளுமையை நேரில் கண்டுணர வேண்டும் என்றும், மொழிப்பெயர்ப்பாளர்  கல்யாணராமன் அவர்களை சந்தித்திட வேண்டும் என்ற உப ஆவல்களுடன் வழக்கம்போல் இந்நிகழ்வுக்கும் நேரம் தாழ்ந்தே சென்றடைந்தேன்.. கல்யாணராமன் பேசி முடித்திருந்தார்..

நான் கேட்க்கும் வாய்ப்பு பெற்ற பெருந்தேவி, காசி மாரியப்பன், பெருமாள் முருகன், ராஜன்குறை ஆகியோரின் உரைகள் பெரிதும் அகாடெமிக் நெடியுடன் கூடியிருந்தன. ஒரு குறிப்பிட்ட கலர் கண்ணாடியை அணிந்துகொண்டு படைப்பை அந்த குறிப்பிட்ட பார்வையினூடே அலசுவது என்ற ஒரு சலிப்பூட்டும் அணுகுமுறையை தேர்ந்து கொண்டனர். இந்நிலையில் ஒவ்வொரு உரைக்கும் பின்னான கேள்வி பதில் நேரம் சற்று சுவாரசியமாகவும் உரையின் மீது மேலதிக வெளிச்சம் பாய்ச்சுவதாகவும் அமைந்தது. குறிப்பாக கல்யாணராமனின் கேள்விகள் சிறப்பான  குறுக்குவெட்டுகளாக அமைந்தன. அவரது நிதானித்த தெளிந்த பார்வையை புலப்படுத்தின.

பெருந்தேவி, பூமணியின் படைப்புகளில் அலைதல் என்ற ஒற்றைத்திரியை தேர்ந்துகொண்டார். அவரது உரை அலைதலின் அழகியல் என்ற ஒற்றை இழையை மிகவும் சுவாரஸ்யமாகவே பதிவு செய்திருந்தது. அனால் உரையின் முடிவில் கல்யாணராமன், அலைதலினால் உண்டாகும் நிச்சயமின்மை முதலிய இடர்களை சுட்டியபோது தான் பெருந்தேவி உரையில் இருந்த மிகப்பெரிய வெற்றிடம் புலப்பட்டது. பெருந்தேவி அலைதலின் அழகியல் என்ற ஒற்றை பரிமாணத்தை மட்டும் romanticise செய்து உள்ளது விளங்கியது. இது போன்ற கல்விப்புலன்சார் கட்டுரை நோக்குகளில் உள்ள பெரும் குறையும் வெளிப்பட்டது. பெருந்தேவியின் உறையினூடே 'கொம்மை' நாவல் பற்றிய பகுதிகள் இந்நாவலின் கிராபிக் சாத்தியக்கூறுகளை மனக்கண் முன் நிகழ்த்திக் காட்டின.

பெருமாள் முருகன் எழுப்பிய 'பொருள்வகை முரண்' யாருக்கும் புரிந்ததாகத் தெரியவில்லை. ஒன்று மட்டும் விளங்கியது,அதாவது மார்க்சிய எழுத்தாளர்கள் தங்கள் கதை சொல்லும் நீதியை தனியே கதையின் முடிவில் எடுத்துரைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர் ஆனால் பூமணி இந்த வழக்கத்தை பின் பற்றவில்லை, மாறாக பூமணி கதையின் மைய ஓட்டத்தின் நடுவிலேயே தனது நீதிகளை பதிந்து விடுவார் என்றார் பெருமாள் முருகன்.

காசி மாரியப்பனின் உரை, பூமணி படைப்புகளில் 'வெளி' என்ற சங்கம் தொட்டு தொடரும் ஒரு ஆய்வுப்பார்வையின் வழியே விரிந்தமைந்தது. அவரது உரையின் முடிவில் பெருந்தேவி எழுப்பிய , அதென்ன அகம் என்றால் பெண்ணுக்கும் புறம் ஆணுக்கும் என்ற நியதி என்ற கேள்வி 'வெளி' என்னும் தளத்தின் மீது ஒரு புதிய பெண்ணிய வெளிச்சத்தை பாய்ச்சியது.

ஒவ்வொரு கேள்வி நேரத்தின் போதும் யவனிகா, பூமணியின் படைப்புகளில் ஜாதி வெளியின் சித்தரிப்பு பற்றி, தொடர்ந்து கேள்வி எழுப்பியபடி இருந்தார்.

ராஜன்குறை தனது உரையில் பூமணியின் படைப்புகள்  அன்றாடம், வரலாறு என்ற இரு வெளியினூடே எப்படி விரிகின்றன என்று விரித்துரைத்தார். அவரது உரை கேட்டு உடனே மனதில் பதிந்து விடும் விதமாக இல்லை. இது போன்ற உரைகள் முன்னரே பதிப்பித்து ஒரு பிரதியை பார்வையாளர்களிடம் தந்தால் மட்டுமே அவற்றை குறித்து ஒரு உரையாடல் உருவாக முடியும்.

ஸ்டாலின் ராஜாங்கத்தின் உரை மிக சிறப்பாக பூமணியின் படைப்புகள் எவ்வாறு அந்தந்த காலத்தின் மாறிவரும் அரசியல்  தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளது என்பதை அஞ்ஞாடிக்கு முன்னான இரு நாவல்களின் வழி அழகாக எடுத்துரைத்தார். 'பிறகு' நாவல் 60களின் பெருங்கனவுகளின் சாத்தியங்களையும் ; 'வெக்கை ' 70களில் வளர்ந்து வந்து நக்சல் முதலிய அதிருப்தி பிரிவினரின் அரசியலையும் பதிவு செய்துள்ளதை உரையில் எடுத்துரைத்தார்.

 வழக்கம் போல் கேள்வி நேரத்தில் இவரிடத்திலும் ஏன் பூமணியின் படைப்புகளில் ஜாதிய சித்தரிப்புகள் மறைக்கப்பட்டுள்ளன என்ற கேள்வி எழுந்தது. இதை ஸ்டாலின் அவர் வகுத்த பார்வையினூடாகவே சிறப்பாக அணுகியிருக்கலாம் என்று தோன்றியது. அதாவது 90களில் இருந்தே ஜாதி அரசியலில் பிரதானம் பெறுகிறது அதற்க்கு முந்தைய அரசியலில் அப்படியில்லை , அது போலவே பூமணியின் அஞ்ஞாடியில் ஜாதி சித்தரிப்புகள் மேலோங்கி நிற்கின்றன அதற்க்கு முந்தைய நாவல்களில் அப்படி இல்லை என்றொரு விளக்கம் எனக்கு ( ஸ்டாலினின் உரையின் மூலம்) தோன்றியது.

தனது ஏற்புரையில், இது போன்ற ஒரு நிகழ்வை சாத்தியப் படுத்த அயல்நாட்டில் வசிக்கும் ஒரு பெண் வரவேண்டியிருக்கிறது என்ற நிலையை நொந்து கொண்டார். தனது நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு கண்டிட நாற்பது வருடங்கள் காத்திருக்க வேண்டியதை சுட்டி நொந்து கொண்டார். தனது ஏற்புரையை சுருங்க முடித்துக்கொண்டு கேள்விகளை வரவேற்றார். தான் தலித் எழுத்தாளன் என்ற அடையாளத்தை முற்றிலும் மறுப்பதாக தெளிவுப் படுத்தினார். பி கேசவதேவின் அண்டை வீட்டார் தனக்கு பிடித்த நாவல் என்று கூறினார். பூமணி கருவேலம் பூக்கள் என்ற படத்தை இயக்கி உள்ளார் என்பது கேள்வி நேரத்தின் போதே எனக்கு புலனாயிற்று (இந்த திரை அனுபவத்தைப் பற்றியோ அவரது மொழிபெயர்ப்பு பணி பற்றியோ உரைகள் இல்லாதது இந்நிகழ்வின் ஒரு குறை) . மேலும் அவரது வெக்கை திரைப்படமாகிறது என்றும் அறிந்தோம்.

நிகழ்வின் தொடரிழையாக ஓடிய கேள்வி பூமணியிடமும் கேட்கப்பட்டது. black literature , black music போன்ற வகைமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், பூமணி  ஏன் தலித் இலக்கியம் என்ற ஒன்றை ஏற்க மறுக்கிறார் என்று 'பேட்டை' தமிழ் பிரபா கேட்டார். இதற்க்கு, தலித் என்று ஒரு அடையாளமே கிடையாது, அது அரசியல்வாதிகள் உருவாக்கிய ஒரு மாயை என்று தான் கருதுவதாக பூமணி விளக்கினார்.

தட்டையான அகடெமிக் கட்டுரைகளே என்றாலும் துளைத்தெடுக்கும் கேள்விகள் மூலம் இந்நிகழ்வு ஒரு சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தியது. முந்தைய நிகழ்வு போன்று இங்கும் பெருந்தேவி தன்னை முன்னிறுத்திக் கொள்வதில்லை என்பதில்  அதிக கவனத்துடன் செயல்பட்டது குறிப்பிடத் தக்கது.

No comments: