Tuesday, June 10, 2014

பொன்னியின் செல்வன் - மேடையில் :

பொன்னியின் செல்வன்  புதினத்தை படித்த ஒவ்வொருவருக்கும் அதனுடன் ஒரு இலக்கிய (? ) படைப்பென்பதையும் தாண்டிய ஒரு உறவு ஏற்பட்டு விடுவதை தவிர்க்க முடியாது. இன்னும், முந்தைய தலைமுறையில்  இதை வார இதழ்களில் தொடராக படிக்க கிடைத்தவர்களுக்கு அது ஏற்படுத்திய தாக்கம் சொல்லி மாளாது. அது ஒரு தனிப்பட்ட அனுபவம். இந்த உன்னத அனுபவத்தை மேடையில் உருவாக்க முயல்வது என்பது ஒரு இமாலய பிரயத்தனம். பலரின் முயற்சியில் கைகூடாது இருந்த இந்த மேடையேற்றும் பிரயத்தனம், ஜூன் 8 அன்று magic lantern என்ற நாடக குழுவால் மிகச் சிறப்பாக மேடையில் காட்சிப் புனரமைக்கப் பெற்றது. புதினத்திற்கும் அதன் வாசகர்களுக்கும் இடையேயான உறவு முழுமை பெற்று, ஒவ்வொரு வாசகனும்  தனிக்களிப்பு கொள்ளும் தருணமாக அது அமைந்தது.

ஒவ்வொரு வாசகனுக்குமே பொன்னியின் செல்வனை மேடையில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆவல் உள்ளே குடி கொண்டிருக்கும். எழுத்தில் தன்னை வெகுவாக பாதித்த அந்த கதாபத்திரங்களை நேரில் கண்டுவிடவேண்டும், தன்  மனதை கொள்ளை கொண்ட அந்த புதின பாத்திரங்களுடன் அளவளாவ அது ஒரு வாய்ப்பாக அமைய வேண்டும் என்றே எளிய வாசக மனம் விழையும்.

இந்த மேடை ஏற்றும் முயற்சியின் முதன்மையான  சவால் என்பது இங்கே வெற்றியை நிர்ணயக்கும் நடுவன் இருவேறு தளங்களில் நின்று இந்த மேடை அனுபவத்தை கனித்த வண்ணம் இருக்கிறான். அவனே வாசக நிலையில் இருந்து தனது தனிப்பட்ட வாசக அனுபவம் மேடையில் உயிர் பெறுவதை கூர்ந்து கவனித்த வண்ணமும்( குறிப்பாக இது ஒரு முதல் முயற்சி என்பதாலும், தன் தனிப்பட்ட அனுபவத்தை பொதுவில் பெயர்க்கும் நிகழ்வு என்பதாலும் கவனிப்பு இன்னும் கூர்மையாகவே இருக்கும்), இன்னொரு தளத்தில் மேடை அனுபவத்தை ஆழ்ந்து ரசித்தபடியும் அதன் கலை அம்சங்களை தரம் பிரித்தபடியும் அவன் தொடர்ந்து செயல் படுகிறான்.

வாசக தளத்தின் கூரிய கவனிப்பே இந்த மேடை முயற்சி எதிர்கொள்ளும் முதல் சவால். அதுவே இந்த முயற்சிக்கு பெரும் பலமும் கூட. வாசக மனம் இந்த காட்சிக்குள் நுழையும்போதே இந்த முயற்சி அசாத்தியம் என்ற மன நிலையிலேயே வருகிறது. 1000 பக்கங்களும் பல வாரங்களாகவும் பரந்து விரிந்த தனது வாசக அனுபவம் எப்படி சில மணி நேரங்களில் மேடையில் அரங்கேற்ற முடியும் என்ற ஐயத்துடனே காட்சியை எதிர் நோக்கியிருக்கிறது.

ஆனால் இந்த எதிர்பார்ப்பை முற்றிலும் விஞ்சுகிற விதமாக குமாரவேலின் திரை-கதை புதினத்தின் கதையோட்டத்தையும் நிகழ்வுகளின் அணைத்து அம்சங்களையும் அதன் வீரியம் குறையாமல் சிறப்பாக மேடைக்கு  கடத்தி வாசக மனத்தை பூரிப்பில் திளைக்கச் செய்கிறது.

மேடை ஏற்ற பெரும் சவாலான பல காட்சிகளையும் வெகு இயல்பாக திரை-கதை சாதித்த படி செல்கிறது. ஆழ்வார்கடியான் ஒற்று பார்க்கும் காட்சி, நிலவறைக் காட்சி, கோட்டை வாசல் காட்சி ஆகியன சிறப்பாக அமைந்தன.

காட்சி படுத்தல் பற்றி பேசும் போது மேடை வடிவமைப்பைப் பற்றி கூறாமல் செல்ல இயலாது. மிக குறைந்த, எளிய, மற்றும் சொற்ப்ப அமைப்புகளையே கொண்டு மிக நேர்த்தியாகவும் சிறப்பாகவும் மேடை, வீராணம் ஏரிக்கரையாகவும், கடம்பூர் மாளிகையும், சக்கிரவர்த்தியின் மாளிகையாகவும், நந்தினியின் அந்தப்புரமாகவும், குந்தவையின் நந்தவனமாகவும், இலங்கையின் படைக்களங்களாவும், காட்சியும் களனும் உருமாறிய படி நம்மை பிரமிக்க வைக்கிறது .

கடலில் ஏற்படும் தீ விபத்தை காட்சி படுத்திய விதம் ஒலி- ஒளி அமைப்பின் உச்சம்.

 ஒரு எழுத்தும் அதன் வாசகர்களும் உறவாடிட  முதலில் பாத்திரங்களுக்கு சரியான நடிகர்களை தேர்வு செய்ய வேண்டும். அந்த நடிகர்கள் வாசக மனதை  வசீகரிக்கும் படி புதினத்தின் காட்சிகளுக்கு உயிரூட்ட வேண்டும். இந்த இரண்டும் வாய்த்துவிட்டால் ஒரு புதினத்தை மேடையில் ஏற்றும் முயற்சி பாதி வெற்றி பெற்று விடும்.

அந்த வகையில் magic lantern இன் இந்த முயற்சி முதல் பந்திலேயே  sixer அடித்து துவக்குகிறது. பொன்னியின் செல்வன் புதினத்தின் அடி நாதமாக விளங்கும் இரு பாத்திரங்கள் ஆழ்வார்கடியனும், வல்லவராயனும். இந்த இரு பாத்திரங்கள் கதையின் ஆரம்பம் முதல் கடைசி வரை பிரயாணிக்கிறார்கள். இந்த பாத்திரங்களை ஏற்று நடித்த இரு நடிகர்களும்  பார்வையாளர்களிடம் ஏற்படுத்திய பாதிப்பு  இந்த முயற்சியின் முதல் வெற்றி.

ஆழ்வர்க்கடியனின் வம்புகளும், வல்லவனின் குறும்புகளும் கல்கியின் எழுத்துக்களின் மண்வாசனையை வாசக-பார்வையாளனின் மனதில் எழுப்புவதன் மூலம் ஒரு பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் பார்வையாளனுக்கு தருகின்றன.

இந்த பாத்திரங்கள் புதினத்தின் அடினாதமென்றால், அருண்மொழியும், நந்தினியும், கரிகாலனும் புதினத்தின் உச்சங்களின் அம்சங்கள். இந்த பாத்திரங்களில் வாசகனின் மனம் ஒரு உச்சத்தை எதிர் நோக்குகிறது. அருண்மொழியிடம் ஒரு தனிப்பொலிவையும், நந்தினியிடம் ஒரு புதிரின் எட்டாதன்மையையும் அமிலத்தன்மையையும், கரிகாலனிடம் ஒரு பெரும் பலத்தின் தவிர்க்க முடியாத வீழ்ச்சியின் சோகத்தையும் கோபத்தையும் காண விழைகிறது.

இந்த பாத்திரங்களுக்கு உயிர் தந்த ஸ்ரீராம் , மீரா மற்றும் பசுபதி இந்த உச்சங்களை வாசகனுக்கு நேர்த்தியாக கடத்திச் சென்று இந்த முயற்சியின் வெற்றிக்கொடியை  நாட்டிவிடுகிறார்கள்.

பசுபதி, கரிகாலனாக மேடையேறியது முதல் சூழ்ச்சிக்கு தன்னை ஒப்புகொடுக்கும் வரை ஒரு களிற்றின் பேராற்றலை வெளிபடுத்தி மேடையில் பவனி வந்து நம்மை கலவரப் படுத்ததுகிறார். பொலிவே தோற்றமாய் வலம் வந்த ஸ்ரீராமின் குரல் மற்றும் வசன வெளிப்படுத்தலில் எம் ஜி ஆரின் சாயல் தெரிந்தது இந்த கட்டுரையாளனின் பிரமையாகவும் இருக்கலாம். மீரா ஒரு உயிர்பெற்ற கோயில் சிலையென மயக்கமும் ஈர்ப்பும் உடையவராக தோன்றி நந்தினியை உயிர்ப்பிக்கிறார்.இந்த உச்சங்களுக்கு இடையே பிற பாத்திரங்கள் இந்த மேடை அனுபவத்துக்கு மேலும் சிறப்பூட்டும் வகையில் சிறப்பாக அமைந்தன.

 நாடக பேராசிரியர் மு ராமசாமி அவர்கள் பெரிய பழுவேட்டரையர் வேடத்திற்கு ஒரு தனி மெருகூட்டியிருக்கிறார். மிகையில்ல இயல்பான நடிப்பும், மன்னர்கள் நடுவில் சீறுவதும், நந்தினியிடம் மயங்குவதும், தம்பியிடம் உரிமை பாராட்டுவதும் , இறுதியில் தன்னால் ஏற்பட்ட கறைநீக்க உயிர் விடும்போதும் நடிப்பிற்கு ஒரு தனி இலக்கணம் வகுத்தபடி செல்கிறார்.

இத்தனை ஜொலிக்கும் நடிப்பிலும் பிற நடிகர்கள் சிறிதும் சோடைபோகாமல் தத்தம் பாத்திரங்களின் இயல்புகளை சிறப்பாக வெளிக்கொண்டுவந்திருப்பது அவர்களின் சிறந்த நடிப்பிற்கு அத்தாட்சி.

ப்ரீத்தி இயல்பான நடிப்பில் குந்தவையின் நிமிர்வையும், வர்ஷா வானதியின் நளினத்தையும் ஒருசேர வெளிப்படும் காட்சிகள் மனதுக்கு இன்பம்.

உப நடிகர்களின் நடிப்பில் கூட நிழலாடும் நேர்த்தி வெளிப்படும் தருனங்கலான - ஒரு வீழ்ந்தவனின் உடலை அசாத்தியமாக தூக்கிச் செல்லும் ஆபத்துதவியும், பிற நடிகர்களின் முகத்தில் நான்கு மணி நேரத்திலும் வாடாதிருந்த புன்னகையும், இயல்பான முக பாவங்களும் உடல் மொழிகளும், ஒரே நடிகனை கொண்டு வெவ்வேறு உபபாத்திரங்களை நிறுவியது, இந்த முயற்சியின் இயக்குனர் ப்ரவினின் சாதனை.

உச்சரிப்பு பிழைகள், வசனத்தில் பிறழ்வுகள், சிறு தடுமாற்றங்கள், காட்சியோட்டத்தில் நடுவில் சிறு தொய்வு ஆகிய சிறு நெருடல்கள், மொத்தமாய் வாய்க்கும் பேரனுபவத்தில் காணாமல் போகின்றன.

நேர்த்தியான சண்டை, சிறப்பான நடனம், களரி அசைவுகள்,  பாடல்கள் என இந்த மேடை அனுபவத்தை முற்றிலும் வேறு தளத்திற்கு உயர்த்துகின்றன. தமிழ் அன்பு நெஞ்சங்களுக்கு இந்த மேடை அனுபவம் ஒரு தித்திக்கும் திருவிழா, மீண்டும் மீண்டும் நனைய தூண்டும் களிப்பு மழை! வாழ்க இந்த முயற்சியின் தயாரிப்பாளர்கள். வளர்க தமிழின்பம்.


No comments: