Tuesday, October 6, 2015

பாரதியின் பாஞ்சாலி சபதம் - திரு பாலசுப்ரமணியன் அவர்கள் வாசிப்பில்

பாரதியின் பாஞ்சாலி சபதம் - திரு பாலசுப்ரமணியன்  அவர்களின்  வாசிப்பில்

என் மனம் லயித்து விடும் ஒரு நிகழ்வைக் கண்டுகொண்டேன், அது பாரதியை கண்டறிதல்- திரு பாலு அவர்களின் அழகிய வாசிப்பில். இதில் நான் பாரதிக்கு மயங்குகிறேனா அல்லது அன்பரது வாசிப்புக்கு மயங்குகிறேனா என்பது 'அவனுக்கு' தான் வெளிச்சம். நமக்கென்ன வந்தது மயங்கி திளைப்பதற்கு ஒரு பொருள் கிடைத்து விட்டது, சந்தோஷம்!

பாஞ்சாலி சபதம் வாசிப்பு எங்களது இரண்டாவது நிகழ்வு. முதல் நிகழ்வில் பாரதியின் ஞான ரதம் முதலிய கதைகளை படித்தோம். பாலு அவர்கள் வாசிக்கும் பொழுது தனுக்கு தானே ரசித்து, படித்ததை அனுபவித்து சுவைக்கும் விதம் தனி அழகு. அவர் குரலினை ஏற்றி எறக்கி பல வர்ணங்களை தீட்டி படிப்பது, படி பொருளை காவியமாக தீட்டி விரிக்க வல்லது. வர்ணங்கள போதாதென்று நமக்கென காளிதாசனையும் வியாசரையும் கம்பரையும் ஆங்காங்கே எடுத்துக்காட்டி காவியத்திற்கு இன்னும் அழகு சேர்ப்பார்.

இது போதாதென்று ஆங்காங்கே பாரதியின் ஆளுமையின் விஸ்வரூபத்தில் இருந்து நமக்கு சிறு சிறு துணுக்குகளை தந்து நம்மை ஆச்சரியத்தில் மூழ்கிடச் செய்வார். ஆக இது ஒரு குட்டி கலக்ஷேப அனுபவம் என்றே கூற வேண்டும்.

அன்பரின் வாசிப்பின் மாய வலை ஒரு புறம் நிற்க பாரதியின் கவித் திறன் , கற்பனைத் திறன், மொழித் திறன் இவற்றை பற்றி நான் கூறினால் ஆகாது. அது படித்து சுவைத்தால் மட்டுமே முழுதும் புலப்பட கூடியது. நான் ரசித்தவற்றை இங்கே பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்.

தோத்திரத்தை தாண்டிய முதல் பாடல் அச்தினாபுரியை பற்றியது. மேல் பார்வைக்கு இது ஒரு தலைநகரத்தின் சிறப்பை கூறுவதாக தோன்றினாலும் பாரதி இதிலும் புரட்சி கருத்துக்களை ஆங்கங்கே செருகி உள்ளான்.

மெய்த்தவர் பலருண் டாம்; -- வெறும்
வேடங்கள் பூண்டவர் பலருமுண் டாம்;


என்று போலிகளை போகிற போக்கில் காட்டிச்  செல்கிறான்.

பாரதி முகவுரையிலேயே திருதிராடிரரை நல்லவரை சித்தரித்துள்ளதாக நமக்கு தெரி/ளிவித்துவிடுகிர்ரர்.

பாண்டவர் அஸ்தினாபுரம் புக்கையில், நகரம் களிப்பதைகூறுபவர் ,

சந்திகள், வீதிகள், சாலைகள், சோலைகள் --
எத்திசை நோக்கினும் மாந்தர் நிறைந்தனர்;
இத்தனை மக்களும் எங்கண் இருந்தனர
இத்தின மட்டும் எனவியப் பெய்துற..


என்பதை துரியோதணன் வியப்பதாக நாம் கொண்டால், காவியத்தின் சுவை இன்னும் கூடும்.  

சகுனி விடும் சூதிர்க்கான அழைப்பை தருமன் மறுக்கிறோம் பொது அவனை இசைக்கச் செய்யும் சகுனியின் சூழ்ச்சியை கவனியுங்கள்..

“நிலமுழு தாட்கொண் டாய் -- தனி்
நீ” எனப் பலர்சொலக் கேட்டதனால்,
சிலபொருள் விளையாட்டிற் -- செலுஞ்
செலவினுக் கழிகலை எனநினைந்தேன்.
168

‘பாரத மண்டலத் தார் -- தங்கள்
பதிஒரு பிசுனனென் றறிவே னோ?
 ...

நிச்சயம் நீவெல் வாய்; -- வெற்றி
நினக்கியல் பாயின தறியா யோ?
நிச்சயம் நீவெல் வாய்; -- பல
நினைகுவ தேன்? களி தொடங்கு’


இப்படி சொல்லி சொல்லியே தருமனை மேலும் மேலும் அழிவின் பாதையில் இழுத்து செல்கின்றான்,

தோல் விலைக்குப் பசுவினைக் கொல்லும்
துட்டன்...

தருமன் மீண்டும் மறுத்தும் ..

மன்னர்
வல்லினுக் கழைத்திடில் மறுப்பதுண் டோ?
175

‘தேர்ந்தவன் வென்றிடு வான்; -- தொழில்
தேர்ச்சிஇல் லாதவன் தோற்றிடு வான்;.....

இவை
சூதென்றும் சதிஎன்றும் சொல்வா ரோ?
176



நாணமிலார் சொலுங் கதைவேண்டா;
வல்லமர் செய்திடவே -- இந்த
மன்னர்முன்னேநினை அழைத்துவிட்டேன்;
சொல்லுக வருவதுண் டேல், -- மனத்
துணிவிலை யேலதுஞ் சொல்லு

 
என்று கூறி தருமனை சம்மதிக்க வைத்துவிடுகிறான். தர்மன் ஏன் இசைகின்றான் ?


பொய்ய தாகுஞ் சிறுவழக் கொன்றைப்
புலனி லாதவர் தம்முடம் பாட்டை
ஐயன் நெஞ்சில் அறமெனக் கொண்டான்.


ஐயகோ! என பாரதி சீறுகிறான், இப்படி தானே இனி பலரும் வீழப் போகிறார்கள் என்று,

முன்பி ருந்ததொர் காரணத் தாலே,
மூடரே, பொய்யை மெய்என லாமோ?
முன்பெனச் சொலுங் கால மதற்கு
மூடரே, ஓர் வரையறை உண்டோ?
முன்பெனச் சொலின் நேற்றுமுன் பேயாம்;
மூன்று கோடி வருடமும் முன்பே;
முன்பிருந்தெண்ணி லாது புவிமேல்
மொய்த்த மக்க ளெலாம் முனி வோரோ?
179

நீர்பி றக்குமுன் பார்மிசை மூடர்
நேர்ந்த தில்லை எனநினைந் தீரோ?
பார்பி றந்தது தொட்டின்று மட்டும்,
பலபலப்பல பற்பல கோடி
கார்பி றக்கும் மழைத்துளி போலே
கண்ட மக்க ளனைவருள் ளேயும்,
நீர்பி றப்பதன் முன்பு, மடமை,
நீசத் தன்மை இருந்தன வன்றோ?
180

பொய்யொ ழுக்கை அறமென்று கொண்டும்,
பொய்யர் கேலியைச் சாத்திர மென்றும்,
ஐயகோ, நங்கள் பாரத நாட்டில்
அறிவி லாரறப் பற்றுமிக் குள்ளோர்
நொய்ய ராகி அழிந்தவர் கோடி.
முன்பிருந்த வழக்கு என்பதாலே நீங்களும் வீழ்ந்திட வேண்டுமா, முன்பிருந்தவன் எல்லாம் என்ன யோக்கியனா என்று பாரதி சீறுவதில் எத்தனை நியாயம் உள்ளது.

சூது ஆட இசைந்து விடுகிறான் தர்மன், அப்பொழுதும் சிறிது நழுவ பார்க்கிறான். பணயம் என்ன வைக்கிறாய் என்று சகுனியை வினவ , துரியோதனன் நான் என் செல்வம் வைக்கிறேன் என்கிறான். இது என்ன டா  ஞாயம் ஒருவன் ஆட இன்னொருவன் பணயம் வைப்பதா என்று தர்மன் ஆட்சேபிக்கிறான். அப்பொழுது இடையிடுகிறான் அங்க அரசன், ஒரு நகைப்புடன். அவன் இந்த படைப்பில் வருவது 3 இடங்களில் , ஏனோ பாரதி அவனை 3 இடங்களிலுமே ஒரு நகைப்புடன் படைத்திருக்கிறார்.

‘பொழுதுபோக்கு தற்கே -- சூதுப்
போர்தொ டங்கு கின்றோம்;
அழுத லேனி தற்கே?’ என்றே
அங்கர் கோன் நகைத்தான்.


தர்மன் ஒவ்வொன்றாய் வைத்து தோற்றாகுகிறது. அனைத்தையும் இழந்திட்ட நிலையில், கள்ள சகுனி,

மாடிழந்து விட்டான், -- தருமன்
மந்தை மந்தையாக;
ஆடிழந்து விட்டான், -- தருமன்
ஆளி ழந்து விட்டான்;
பீடி ழந்த சகுனி -- அங்கு
பின்னுஞ் சொல்லு கின்றான்:
‘நாடி ழக்க வில்லை, -- தருமா!
நாட்டை வைத்தி’டென்றான். 


நாட்டை வைத்திடு என்கிறான். இதை கூறும் சமயம் அவன் வீடு பேறு இழக்கின்றான், இதை effect precedes the cause ஆக பாரதி சொல்லிஇருப்பதை சுட்டும் அன்பர் நமக்கு இதன் ராமாயண   நேர் நிகழ்வையும் சுட்டி காட்டுகிறார்.

காப்பியம் உயிர் பெறுவதென்பது இது போன்ற தருனங்களிலன்றோ!

இதை சொல்லக்கேட்டவுடன் , விதுரன் பொங்கி எழுகிறான். இது ஞயாயம் இல்ல என்பதை எடுத்துரைக்கிறான். பாண்டவர்க்கு தீங்கிழைத்தால் அவர்களது நேச நாடுகள் பொறுக்க மாட்டா என்கிறான்,

பாண்ட வர்பொறை கொள்ளுவ ரேனும்,
பைந்து ழாயனும் பாஞ்சாலத் தானும்
மூண்ட வெஞ்சினத் தோடுநஞ் சூழல்
முற்றும் வேரறச் செய்குவ ரன்றோ?


இதை தற்கால சூழலில் இவனை attack பண்ணா சீனா support க்கு வருவான் என்றெல்லாம் நாடுகள் யோசிப்பதை சுட்டி காட்டுகிறார் நம் கதகலஷேபர். 

கேட்டி லேகளி யோடுசெல் வாயோ?
கேட்குங் காதும் இழந்துவிட் டாயோ? 


என்று தன அண்ணனை காய்கிறான் விதுரன். இந்தக் காய்தலின் உச்சமாக ..

நெறி இழந்தபின் வாழ்வதி லின்பம்
நேரு மென்று நினைத்திடல் வேண்டா.


என்ற வரியை படிக்க நம் வாசிப்பாளர், பொன்னால் பதிக்கப் பட வேண்டியவை என்று குதூகளிக்கிறார்.

அடுத்து வரும் 'பராசக்தி வணக்க 'த்தில், 

ஈங்குனைச் சரணென் றெய்தினேன்; என்னை
  இருங்கலைப் புலவனாக் குதியே.  


என்று வேண்டும் பாரதியின் தூய மனதினை பிரமிக்காமல் இருக்க முடியாது. 

விதுரன் எவ்வளவு தான் நியாயத்தை எடுத்துச் சொன்னாலும்..

நெறிஉ ரைத்திடும் மேலவர் வாய்ச்சொல்
நீச ரானவர் கொள்ளுவ துண்டோ?
 

  
துரியன் சித்தப்பனை சாடுகிறான்..
  
நன்றி கெட்ட விதுரா, சிறிதும்
நாண மற்ற விதுரா,
தின்ற உப்பினுக்கே நாசந்
தேடுகின்ற விதுரா,...


என்று நம் 'பாலு'வோ துரியனின் சொற்களில்  அதிருகிறார்..

அன்பிலாத பெண்ணுக்கு -- இதமே
ஆயிரங்கள் செய்தும்,
முன்பின் எண்ணு வாளோ? -- தருணம்
மூண்ட போது கழிவாள்.
வன்புரைத்தல் வேண்டா, -- எங்கள்
வலிபொறுத்தல் வேண்டா,
இன்ப மெங்க ணுண்டோ, -- அங்கே
ஏகி’டென்று ரைத்தான். 


துரியன். எதற்கு  எதை ஒப்பிடுகிறான் பாருங்க பாரதி.

'தன்னைக்
கொன்றாலும் ஒப்பாகா  வடுச்சொற் கூறிக்
குமைவதனில் அணுவளவுங் குழப்ப மெய்தா' விதுரன்  இந்த கடுஞ்சொர்க்கள் கேட்டு


'சென்றாலும் இருந்தாலு இனிஎன் னேடா?' 

என்று மயங்காமல் மயங்குவதை நம் கதைப்பவர் சொல்லும் போது நம் கண்களிலும் நீர் தேங்கிடும்.  வேறு வழியின்றி,  

விதுரன் கூறி
வாய்மூடித் தலைகுனிந்தே இருக்கை கொண்டான்.




அப்பொழுது ,

பதிவுறுவோம் புவியிலெனக் கலிம கிழ்ந்தான்,
பாரதப்போர் வருமென்று தேவ ரார்த்தார்.
 


என்ன ஒரு dramatic effect கொடுக்கிறான் பாரதி. 

தருமனும் நாட்டை பணயம் வைக்க தயார் ஆகின்றான் .. அப்போ பொங்கும் நம் பாரதி ...

ஓரஞ் செய்திடாமே, -- தருமத்
துறுதி கொன்றிடாமே,
சோரஞ் செய்திடாமே, -- பிறரைத்
துயரில் வீழ்த்திடாமே,
ஊரை யாளு முறைமை -- உலகில்
ஓர்புறத்து மில்லை.
(அட...) 

சார மற்ற வார்த்தை! -- மேலே
சரிதை சொல்லு கின்றோம்.
 


அந்த 'அட' போட்டது நம்ம ஆளு பாலு ... 

எல்லாமும் எழந்துட்டான் தர்மன் அவன எப்படி சாதுர்யமா பேசி மேலும் விளையாட வைக்கிறான் பாருங்க சகுனி..

எல்லா மிழந்த பின்னர் -- நின்றன்
இளைஞரும் நீரும்மற் றெதிற்பிழைப்பீர்?
பொல்லா விளையாட்டில் -- பிச்சை
புகநினை விடுவதை விரும்புகிலோம்.
வல்லார் நினதிளைஞர் -- சூதில்
வைத்திடத் தகுந்தவர் பணயமென்றே;
சொல்லால் உளம் வருந்தேல்; -- வைத்துத்
தோற்றதை மீட்’டென்று சகுனிசொன்னான். 


தன் இளையவர்களையும் பணயம் வைக்க முனையும் தர்மன், சஹாதேவனை பற்றி கூறும் போது ,

எப்பொழு தும்பிர மத்திலே -- சிந்தை
ஏற்றி உலகமொ ராடல்போல் -- எண்ணித்
தப்பின்றி இன்பங்கள் துய்த்திடும்


என்ன ஒரு description. இதை கூறும் போது நம் நண்பர் இதை நோக்கும் பார்வையே வேறு. இதைக் கேட்டவுடன் தன்னை பற்றி மூத்தவர் கொண்டுள்ள கருத்தை இந்த பொழுதிலேனும் கேட்க்க் கேடைத்ததே என்று இளையவன் பூரித்தானாம் ... இன்ன ஒரு கற்பனை..  

நகுலனையும் இப்படி இழந்த பிறகு தருமனுக்கு லேசா ஒரு பொறி தட்டுதாம் ..

நகுலனை வைத்தும் இழந்திட்டான்; -- அங்கு
நள்ளிருட் கண்ணொரு சிற்றொளி -- வந்து
புகுவது போலவன் புந்தியில் -- ‘என்ன
புன்மை செய்தோம்?’ என எண்ணினான்


ஆனால் இந்த பொறிய சகுனி எப்படி சட்டுன்னு அனைச்சு ஆட்டத்த தன் பக்கம் திருப்புறான் பாருங்க ..

ஐய,
வேறொரு தாயிற் பிறந்தவர் -- வைக்கத்
தகுவரென்றிந்தச் சிறுவரை -- வைத்துத்
தாயத்தி லேஇழந் திட்டனை. 


அதாவது, அந்த பசங்க வேற தாய்க்கு (மாதரி) பிறந்தவங்கன்னு தானே அவங்கள பந்தயத்துல வச்ச ..   குந்திக்கு பிறந்தவர்களை வைப்பிய நீ யாரு நு அவன சீண்ட தருமனும் தன்னிலையை இழக்கிறான். 

தர்மன் தன்னையும் இழந்து விடுகிறான், உடனே துரியனுக்கு ஒரே குஷி குதூகலிக்கிறான் ..ஆனால் இன்னும் அடங்காத சகுனி துரியனை எப்படி அடக்கி, தருமனை மேலும் குழியில் இட்டுச்செல்கிறான் பாருங்க.. 

புண்ணிடைக் கோல்கொண்டு குத்துதல் -- நின்னைப்
போன்றவர் செய்யத் தகுவதோ? .....

...
நண்ணித் தொடங்கிய சூதன்றோ? -- இவர்
நாணுறச் செய்வது நேர்மையோ? 


என்றெல்லாம் சொல்லிட்டு ..

இன்னும் பணயம்வைத் தாடுவோம்; -- வெற்றி
இன்னும் இவர்பெற லாகுங்காண்.
...................................................................இவர்
மேவிடு தேவியை வைத்திட்டால், அவள்
துன்னும் அதிட்ட முடையவள் -- இவர்
தோற்ற தனைத்தையும் மீட்டலாம்.’
 
 
 


என்று கூறி அதலபாதளத்திற்கு வழி காட்டுகிறான் சகுனி.

வேள்விப் பொருளினையே -- புலை நாயின்முன்
மென்றிட வைப்பவர்போல்,....

உயிர்த்தேவியைக்
கீழ்மக்கட் காளாக்கினான். 


the hell goes loose . 

கக் கக்கென் றேநகைப்பார் -- ‘துரியோதனா,
கட்டிக்கொள் எம்மை’என்பார். 


அந்த சிரிப்பு personifies  evil .    குதூகலத்தில் துரியன் திரௌபதியை அவைக்கு அழைத்து வர ஆணையிடுகிறான். அப்பொழுது ஜகத்தில் அதர்மக் குழப்பம் ஏற்ப்படுவதை 

தருமம் அழிவெய்தச் சத்தியமும் பொய்யாக,
பெருமைத் தவங்கள் பெயர்கெட்டு மண்ணாக,
வானத்துத் தேவர் வயிற்றிலே தீப்பாய,..

 
என்று பாரதி ஒவ்வொன்றாய் தன இயல்பிலிருந்து வழுவுவதை குறிப்பிட்டு   செல்கிறான், ஆனால் தன் பிரிய சக்தியைப்  பற்றி மட்டும்  நீண்ட அடுக்கு மொழிகளால் அலங்கரித்துவிட்டு ..

ஆக்கந்தா னாவாள், அழிவு நிலையாவாள்,
போக்குவர வெய்தும் புதுமை யெலாந் தானாவாள்,
மாறிமாறிப்பின்னும் மாறிமாறிப்பின்னும்
மாறிமா றிப்போம் வழக்கமே தானாவாள்,
ஆதிபராசக்தி -- அவள்நெஞ்சம் வன்மையுற


என்று ஒரு சின்ன 'switch on ' (இது நம்ம ஆளோட interpretation ) மட்டும் செய்துவிட்டு கடந்து செல்கிறான். கவிகள் எப்படியெல்லாம் தங்கள் பாடுபோருள்களிடம் தாட்சண்யம் காட்டுகிறார்கள் கவனியுங்கள்.

பொல்லாத துரியன் விதுரனை போய் ஏவுகிறான் திரௌபதியை கொணர. இதை கேட்டு பொங்கும் விதுரன், 

நெஞ்சஞ் சுடவுரைத்தல் நேர்மைஎனக் கொண்டாயோ?
மஞ்சனே, அச்சொல் மருமத்தே பாய்வதன்றோ?
கெட்டார்தம் வாயில் எளிதே கிளைத்துவிடும்;
பட்டார்தம் நெஞ்சிற் பலநாள் அகலாது.


என்று துடிக்கின்றான். விதுரனை 'கெடுக ' என்று ஒதுக்கிவிட்டு தேர்ப்பாகனை ஏவுகிறான்.

இந்த தேர்பாகன் கூற்றை பாரதி மிக அழகாக வடிவமைத்துள்ளான். பாகன் சென்று திரௌபதியிடம் 

பாகன் விரைந்துபோய்ப் பாஞ்சாலி வாழ்மனையில்
சோகம் ததும்பித் துடித்த குரலுடனே,
‘அம்மனே போற்றி! அறங்காப்பாய், தாள்போற்றி!


என்று  வந்தனம் செய்யும் இடம் , சிலம்பில் வாயிற்காவலர்

அடர்த்து எழு குருதி அடங்காப் பசுந் துணிப்
பிடர்த் தலைப் பீடம் ஏறிய மடக்கொடி,
வெற்றி வேல் தடக்கைக் கொற்றவை, அல்லள்;
அறுவர்க்கு இளைய நங்கை, இறைவனை
ஆடல் கண்டருளிய அணங்கு, சூர் உடைக்
கானகம் உகந்த காளி, தாருகன்
பேர் உரம் கிழித்த பெண்ணும், அல்லள்;
செற்றனள் போலும்; செயிர்த்தனள் போலும்;  


என்று  கண்ணகியை தெய்வத்தை இணையாக கொண்டு விவரிக்கும்  காட்சியை நினைவுறுத்துவனவாக உள்ளன.   

பாகனிடம் முதலில் 

‘யார்சொன்ன வார்த்தையடா!

என்று சீறும்  திரௌபதி , 

“என்னைமுதல் வைத்திழந்தபின்பு தன்னைஎன்
மன்னர் இழந்தாரா? மாறித் தமைத்தோற்ற
பின்னரெனைத் தோற்றாரா?” 


என்ற கேள்வியை பாகனிடம் தொடுத்து ஏவுகிறாள். பின்னர் தன் நிலை உணர்ந்தவளாய் , https://www.blogger.com/blogger.g?blogID=9223344169351337930#editor/target=post;postID=7899805153987479635;onPublishedMenu=allposts;onClosedMenu=allposts;postNum=1;src=postname

தன்னந் தனியே தவிக்கும் மனத்தாளாய்,
வன்னங் குலைந்து மலர்விழிகள் நீர்சொரிய
உள்ளத்தை அச்சம் உலைஉறுத்தப் பேய்கண்ட
பிள்ளையென வீற்றிருந்தாள்
...

  
மீண்டும் வந்த பாகனிடம், முற்றில் வேறு தொனியில், 

‘தம்பி,
என்றனை வீணில் அழைப்பதேன்?  


என்று  இரங்கச்செய்கிறாள். மேலும் சில வினாக்களை தொடுத்து ஏவுகிறாள். இதில் இக்கட்டிற்கு ஆளாகும் பாகன், அவள் மாதவிடாயில் இருக்கிறாள் என்று கூறிவிடுகிறான். அதற்கும் பயபடதவர்கள் . 

( this article is under construction)

2 comments:

VarahaMihira Gopu said...

Extraordinary essay Vijaysagar! Congratulations. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம், என, பாலு சார் ரசித்து களித்து வாசித்து அளித்ததை, அகமகிழ தமிழ் நெகிழ எழுதி பகிர்ந்துள்ளீர். சஞ்சய தரிசனம் போல் இக்கட்டுரை படிக்க படிக்க, காட்சிகள் கண்முன் வந்தன.

N.Balasubramanian said...

ஆஹா! என் இலக்கியப்பகிர்வு அனுபவங்களில் மிக உயர்ந்த நெஞ்சார்(ந்த) வெற்றி! அரிய கட்டுரை! தன்னிலேயே இலக்கிய நயம் மிக, படிப்பவர் நெஞ்சை ஆளும் ஆனந்த அதிர்வுடன் ஸ்பாண்ட்டேனியஸாக வெளிப்பட்டுள்ள எழுத்து!. வாழ்க ரஸிகமணீ!