Monday, October 3, 2016

ஆய்ச்சியர் குரவை

ஆய்ச்சியர் குரவை

நான் பொதுவாகவே இலக்கியங்கள் மேடையில் படைக்கப்படும் போது மிகவும் பரவசப்படுபவன் . அப்படியிருக்க மயிலை ஆர் கே ஹாலில் ஆய்ச்சியர் குரவை lec -dem வழங்குகிறார்கள், அதுவும் ஒரு ஒய்வு பெற்ற இயர்ப்பியல் பேராசிரியர் முனைப்பில் நிகழ்கிறது என்று அறிந்த உடன் மிக்க ஆர்வம் கொண்டேன். இருந்தும் இது சிலம்பில் வரும் ஆய்ச்சியர் குரவை தானே இன்று ஒரு சிறு ஐயம் மிஞ்சியிருந்தது. அரங்கில் நுழைந்தவுடனேயே ஆம் இது சிலம்பின் ஆய்ச்சியர் குரவை தான் என்று பேராசிரியர் ரங்கராஜன் அவர்களிடம் கேட்டு தெளிந்த பின் ஒரு பரம திருப்த்தி. இந்த முயற்சிக்கே அவர்களுக்கு கோடி வணக்கங்கள் சொல்ல வேண்டும்.

இது போதாதென்று குரவையை நமக்கு பாடி அளிக்க இருந்த கலைஞர் மிகவும் அறிமுகமான முகமாக தெரிந்தது, பின் கேட்டு தெளிந்ததில் அவர் நான் பெரிதும் மதிக்கும் கலைஞர் , மக்கள் தொலைக்காட்சியில் நான் பல இடையூருகளுக்கு நடுவே கேட்டு மகிழ்ந்த தேவாரங்களை பாடி வழங்கிய செல்வி கீர்த்தனா. அவரது அருமையான கீர்த்தனைகளை இன்று நேரில் வழங்க கேட்பது ஒரு பெரும் பாக்கியமாக அமைந்தது.

திங்களைப் போற்றுதும்! திங்களைப் போற்றுதும்!-
கொங்கு அலர் தார்ச் சென்னி குளிர் வெண்குடை போன்று, இவ்
அம் கண் உலகு அளித்தலான்.
ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்!-
காவிரி நாடன் திகிரிபோல், பொன் கோட்டு 
மேரு வலம் திரிதலான்.
மா மழை போற்றுதும்! மா மழை போற்றுதும்!-
நாம நீர் வேலி உலகிற்கு அவன் அளி போல்,
மேல நின்று தான் சுரத்தலான்.
பூம் புகார் போற்றுதும்! பூம் புகார் போற்றுதும்!
வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தோடு
ஓங்கிப் பரந்து ஒழுகலான்.

(texts from tamilvu.org )

 என்ற சிலம்பின் மங்கல  வாழ்த்துப் பாடலை பாட கேட்டதுமே பெரும் அற்புதமாக அமைந்தது. வாழ்த்துப்பாடலை தொடர்ந்து பேராசிரியர் ரங்கராஜன் ஆங்கிலத்திலும் , அவரது துணைவியார் பேராசிரியர் விஜயலக்ஷ்மி ( இவர் oxford இல் இந்தியவியல் துறையில் பயின்றுள்ளார்) தமிழிலும் சிலம்பில் ஆய்ச்சியர் குரவையின் இடத்தையும் சிறப்புக்களையும் விளக்கினர்.

இந்த விளக்கங்கள் கருத்தளவில் சிறப்பாக அமைந்தாலும் இன்னும் கூடுதல் அழகாக ஒரு கலாக்ஷேபம் முறையில் அமைந்திருந்தது  இன்னும் சிறப்பாக வழங்கியிருக்கலாம் என்று தோன்றியது. விவரணைகள் ஒரு தட்டையான தகவல்கள் அளிக்கும் விதமாக மட்டும்மல்லாமல் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கலாம் .

ஆனால் இந்த சிறு சறுக்கலை மிக அருமையாக உயர்த்தி நிறுத்தியது இளங்கோவின் தமிழும் செல்வி கீர்த்தனா அவற்றை இசையுடனும்,  ( பாடல்களை அவற்றின் பொருள் மற்றும் திணைக்கேற்ப இசை அமைத்து தந்தது இன்னொரு மக்கள் tv புகழ் வைத்தியலிங்கம் ஐயா என்று பிறகு கேட்டறிந்தேன், இதை தொகுத்து வழங்கியவர்கள் கூற மறந்து இன்னொரு சிறு ஏமாற்றம்.) உணர்வுப் பெருக்குடனும்  வழங்கிய விதம் எம் நெஞ்சை அள்ளியது.


சிலம்பில் ஆய்ச்சியர் குரவை அரங்கேறுவது மதுரை காண்டத்தில். கண்ணகியின் சிலம்பை விற்று பொன்செய்ய கோவலன் நகர் சென்றுள்ளான், கண்ணகி அவன் வரவை எதிர்நோக்கி கவலையுடன் அமர்ந்துள்ளாள் . அப்பொழுது மாதரி காதில் கேட்கிறது பாண்டியனின் முரசு சத்தம். வெறும் பாண்டியன் னு சொல்லி போக முடியுமா.. அவன் மெய்க்கீர்த்தி ரெண்ட கூட சேர்த்து சொல்ல வேண்டும்.. அது  இமயத்தில் மீன் கொடி நட்ட பாண்டியன்னு படுறார் இளஙகோ

கயல் எழுதிய இமய நெற்றியின் 
அயல் எழுதிய புலியும் வில்லும் 
நாவல் அம் தண் பொழில் மன்னர் 
ஏவல் கேட்ப, பார் அரசு ஆண்ட 
மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் 
காலை முரசம் கனை குரல் இயம்பும்; ஆகலின், 
நெய்ம் முறை நமக்கு இன்று ஆம்’ என்று, 

 இந்த பாடல் இன்ன ராகம் என்று கண்டு கொள்ளும் அளவுக்கு எனக்கு விஷயம் தெரியவில்லை, ஆனால் இது கர்ணன் படம் ' என் உயிர் தோழி ' பாடல் மெட்டில் அமைந்திருந்தது என்பது கூடுதல் செய்தி . இளங்கோவின் பாடல்களுக்கு அவற்றின் சூழல் மற்றும் பொருளுக்கு ஏற்ப மிக்க பொருத்தமான இசை அமைத்திருந்தது நெஞ்சை அள்ளியது, இங்கே குறிப்பிட வேண்டும்.

பாண்டியன் முரசு ஒலி  கேட்டதும் தான் மாதிரிக்கு இன்று அரண்மனைக்கு நெய் வழங்கும் முறை தனது என்பது நினைவு வருகிறது. உடன் தன மகள் அய்யை ஐ கூப்பிட்டு ஆவண செய்ய ஏவுகிறாள். 

அப்பொழுது அவளுக்கு பல தீய சகுனங்கள் தெரிகின்றன. பால் உரையவில்லை , நெய் உருகவில்லை , ஆ இனங்கள் சோர்ந்து காணப்படுகின்றன , எருதின் கண்களில் நீர் வழிகிறது.. இவை அனைத்தும் கண்ட மாதரி எதோ தீங்கு விளைவதுண்டு என்று திண்ணம் கொள்கிறாள். 

குடப் பால் உறையா; குவி இமில் ஏற்றின் 
மடக் கண் நீர் சோரும்; வருவது ஒன்று உண்டு! 
உறி நறு வெண்ணெய் உருகா; உருகும் 
மறி, தெறித்து ஆடா; வருவது ஒன்று உண்டு! 
நால் முலை ஆயம் நடுங்குபு நின்று இரங்கும்; 
மால் மணி வீழும்; வருவது ஒன்று உண்டு!


தன  மகளை அழைத்து கவலை கொள்ள வேண்டாம், தங்கள் விருந்தினர் கண்ணகி காணும் வண்ணமும், சோர்ந்திருந்த  ஆ இனங்கள் மகிழும் வண்ணமும் ,( என்னே ஒரு மனிதம் ) முன்பு கண்ணன், பலராமனுடனும் நப்பின்னை உடனும் ஆடிய குரவை கூத்தை ஆடுங்கள் என்று தன் ஆவலை கூறுகிறாள் . 

வருவது ஓர் துன்பம் உண்டு’ என, 
மகளை நோக்கி, ‘மனம் மயங்காதே! 
மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய 
கண்ணகியும்-தான் காண, 
ஆயர் பாடியில், எரு மன்றத்து, 
மாயவனுடன் தம்முன் ஆடிய 
வால சரிதை நாடகங்களில், 
வேல் நெடுங் கண் பிஞ்ஞையோடு ஆடிய 
குரவை ஆடுதும் யாம்’ என்றாள்- 
‘கறவை, கன்று, துயர் நீங்குக எனவே,’


ஆயர் மகளிரின்  கைப்பற்ற, ஆடவர் அவர்கள் வளர்த்த காளையை அடக்க வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. அந்த வழக்கை எடுத்தாண்டு ஏழு ஆயர் மகளிரை கொளு அமைக்கிறார் இளங்கோ. இம்மகளிரை வருணிக்கும் பேரில் அவர்கள் வளர்த்த காளையையும் இளங்கோ வருணித்து செல்கிறார் பாருங்கள் ,..


1
‘காரி கதன் அஞ்சான் பாய்ந்தானைக் காமுறும், இவ்
வேரி மலர்க் கோதையாள்; சுட்டு, 
2
நெற்றிச் செகிலை அடர்த்தாற்கு உரிய, இப்
பொன் தொடி மாதராள் தோள். 
3
மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள், இம்
முல்லை அம் பூங் குழல்-தான். 
4
நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும், இப்
பெண் கொடி மாதர்-தன் தோள்.
5
பொன் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்: இந்
நன் கொடி மென்முலை-தான். 
6
வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள், இக்
கொன்றை அம் பூங் குழலாள். 
7
தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள், இப்
பூவைப் புது மலராள்.


 பாவையின் வருணனையும் காளையின் வருணனையும் எப்படி ஒருங்கிணைத்திருக்கிறார் இளங்கோ என்று காண்க. இந்தப்பாடலை அழகிய காவடிச்சிந்தில் பாடி பரவசமூட்டினார் கீர்த்தனா. 

இந்த ஏழு பெண்களையும் ஒரு சீராக  நிற்க வைக்கிறாள் மாதரி . அவர்களுக்கு இந்த குரவை நிகழ்வுக்காக கோட்ப்பெயரிடுகிறாள் - 

ஆங்கு,
தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார
எழுவரிளங் கோதை யார
என்றுதன் மகளைநோக்கித்
தொன்றுபடு முறையால் நிறுத்தி
இடைமுது மகளிவர்க்குப்
படைத்துக்கோட் பெயரிடுவாள்
குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம்
கைக்கிளை உழைஇளி விளரி தாரமென
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே ;

குடமுதல், அதாவது starting from west , இடைமுறையாக -going  leftwards , we have - குரல், துத்தம்,கைக்கிளை, உழை, இளி , விளரி and தாரம். கோட்ப்பெயர் அதோடு நிற்கவில்லை , இன்னும் குரலை மாயவன் என்றாள் , வெள்ளை ஆயவன், அதாவது பலராமன் என்றாள் இளி யை , மேலும் நப்பின்னை என்றாள் துத்த நரம்பினை...

மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை
ஆயவன் என்றாள் இளிதன்னை--ஆய்மகள்
பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார்
முன்னையாம் என்றாள் முறை ;

மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும்
வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும்
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள்
முத்தைக்கு நல்விளரி தான் ;

அவருள்,
வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத்
தண்டாக் குரவைதான் உள்படுவாள்--கொண்டசீர்
வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப்
பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே
ஐயென்றா ளாயர் மகள் ;

துளசி மாலையை மாயவன் மேல் போட்டு அவர்களை குரவைக்குள் உட்படுத்துகிறாள், அச்சமயத்தில் நப்பின்னையின் அழகில் மயங்கிய திருமால் தன் மார்பில் குடியிருக்கும் திரு வை மறந்தானோ என்று வியக்கிறாளாம் மாதரி.

இனி அவர்கள் வட்டமாக நின்று, கைகோர்த்து கூத்துட்படுவதை , இளங்களோ இவ்வாறு கூறுகிறார் ..

அவர்தாம்,
செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஓத்து
அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்--முன்னைக்
குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற
கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும்
முல்லைத்தீம் பாணியென் றாள் ;
எனாக்,
குரன்மந்த மாக இளிசம னாக
வரன்முறையே துத்தம் வலியா--உரனிலா
மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின்
பின்றையைப் பாட்டெடுப் பாள் ;

 இதில் அநேக இசை விஷயங்கள் உள்ளன அவை ஆழ்ந்து நோக்க வேண்டியன. a few things i gathered were: குரலுக்கு துத்தம் இணை , இளி கிளை ஆகும் . மந்தம், பற்றி அறிய , இதை காண்க - மந்தம் முதலியன முறையே மந்தரம், மத்திமம், தாரம் எனவும், மந்தம், சமம், உச்சம் எனவும் கூறப்படும். மந்திரத்திற்கு ஐந்தாவது சமமும், அதற்கைந்தாவது வலியும், பின்னும் அதற்கைந்தாவது மந்தமுமாக வருதல் காண்க.

  மேலும் நான்காவது நரம்பு நட்பு நரம்பு எனப்படுகிறது. அதாவது விளரிக்கு துத்தம் நட்பு. 

enough of technicalities.. இனி குரவை பாடல் தொடங்குகிறது. இதில் சில பகுதியை காண்போம். முதலில் மாயவனையம் அவன் குழலோசையின் சிறப்பையும் வருணிக்கிறார்கள், 


1
கன்று குணிலாக் கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!
2
பாம்பு கயிறாக் கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ, தோழீ!
3
கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல், அவன் வாயில்
முல்லை அம் தீம் குழல் கேளாமோ, தோழீ! 
இந்த பாடலை ஒரு அழகான தாலாட்டு போல் பாடி நம்மை ஆற்றுவித்தார்கள் . ( it sounded like the lullaby in the title track of Life of Pi)

இனி பின்னையைப் பாடுவோம்.. now the music changes track to faster paced bhajan kind of rhythm.. 

4
இறும் என் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை ஒளித்தான் வடிவு என்கோ யாம்?
அறுவை ஒளித்தான் அயர, அயரும்
நறு மென் சாயல் முகம் என்கோ யாம்? 
5
வஞ்சம் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சம் கவர்ந்தாள் நிறை என்கோ யாம்?
நெஞ்சம் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சம் செய்தான் வடிவு என்கோ யாம்?
6
தையல் கலையும் வளையும் இழந்தே
கையில் ஒளித்தாள் முகம் என்கோ யாம்?
கையில் ஒளித்தாள் முகம் கண்டு அழுங்கி,
மையல் உழந்தான் வடிவு என்கோ யாம்? 
நாரதர் comes inspecting the dance formations..

1கதிர் திகிரியான் மறைத்த கடல் வண்ணன் இடத்து உளான்,
மதி புரையும் நறு மேனித் தம்முனோன் வலத்து உளாள்,
பொதி அவிழ் மலர்க் கூந்தல் பிஞ்ஞை: சீர் புறங்காப்பார்
                
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார்.
2
மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள்,
பயில் இதழ் மலர் மேனித் தம்முனோன் இடத்து உளாள்,
கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை: சீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் 
இனி மாயவனை முன்னிலைப் பரவல் , (praising in second person), the famous song..

1வடவரையை மத்து ஆக்கி, வாசுகியை நாண் ஆக்கி,
கடல் வண்ணன்! பண்டு ஒரு நாள் கடல் வயிறு கலக்கினையே:
கலக்கிய கை அசோதையார் கடை கயிற்றால் கட்டுண் கை:
மலர்க் கமல உந்தியாய்! மாயமோ? மருட்கைத்தே!
2‘அறு பொருள் இவன்’ என்றே, அமரர் கணம் தொழுது ஏத்த,
உறு பசி ஒன்று இன்றியே, உலகு அடைய உண்டனையே:
உண்ட வாய் களவினான் உறி வெண்ணெய் உண்ட வாய்:
வண் துழாய் மாலையாய்! மாயமோ? மருட்கைத்தே!
3திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்! நின் செங் கமல
இரண்டு அடியான் மூ-உலகும் இருள் தீர நடந்தனையே;
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூது ஆக நடந்த அடி;
மடங்கலாய்! மாறு அட்டாய்! மாயமோ? மருட்கைத்தே! 

ஆம் என்ன  அதிசயம் , மலையை மத்தாக்கி , கடல் திரித்த கைகள் இன்று யசோதை கட்டிய கட்டுள் அடங்கிக் கிடக்கின்றன; உலகை உண்ட வாய் , வெண்ணெய் உண்கிறது, மூவுலகும் அளந்த கால்கள், பாண்டவர்க்கு தூது நடக்கின்றன !!!

மேலும் படர்க்கையில் பரவுகிறார்கள் (praising in third person) 


1மூ-உலகும் ஈர் அடியான் முறை நிரம்பாவகை முடியத்
தாவிய சேவடி சேப்ப, தம்பியொடும் கான் போந்து,
சேர அரணும் போர் மடிய, தொல் இலங்கை கட்டு அழித்த
சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே?
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே?
2
பெரியவனை; மாயவனை; பேர் உலகம் எல்லாம்
விரி கமல உந்தி உடை விண்ணவனை; கண்ணும்,
திருவடியும், கையும், திரு வாயும், செய்ய
கரியவனை; காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார்-தம் கண் என்ன கண்ணே? 
3
மடம் தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை; நூற்றுவர்பால் நால் திசையும் போற்ற,
படர்ந்து ஆரணம் முழங்க, பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை; ஏத்தாத நா என்ன நாவே?
‘நாராயணா!’ என்னா நா என்ன நாவே? 

பரவி, தங்கள் துயர் நீங்கவும் மன்னன் வெற்றிக்கும் தெய்வத்திடம் வேண்டி குரவையை நிறைவு செய்கிறார்கள்..

என்றியாம்
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம்
ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர்
மருள வைகல் வைகல் மாறட்டு
வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து
இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த
தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே.

ரவி, தங் நிறைவாக தமிழுடன்மெல்லிய தென்றலென  பயணித்து வந்த ஸ்ருதி சங்கரின் குழலோசை கண்ணனின் குழலென மயங்க வைத்தது . தன் உள்ளம் அனைத்தும் ஒருமித்து நாட்டியம் புரிந்த மனஸ்வினிக்கும், மிருதங்க கலைஞருக்கும்  நம் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். தமிழிலும் இசையிலும் மயங்கி கிடந்ததால் நம் எண்ணம் நாட்டியத்தில் செல்லவில்லை என்பது திண்ணம். dont miss the performance here.

No comments: