Saturday, April 28, 2018

Benitha Perciyal


ஸ்பேஸஸில் நடந்து முடிந்த ‘உழைப்பை ஆவணம் செய்தல்’ என்னும் கலைக் கண்காட்சியின் ஒரு பகுதியாக, 29/3/2018 வியாழன் மாலை ஓவியர், கலைஞர் பெனிட்டா பெர்சியால் அவரது கலைப் பயணத்தை மாணவர்களுடனும், பார்வையாளர்களுடனும் பகிர்ந்து கொள்ளும் நிகழ்வு அரங்கேறியது. இதில் ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தன் பயணத்தை, தன்படைப்புகளின் காட்சியுடனும் தன்அனுபவங்களின் விளக்கங்களுடனும், பார்வையாளர்களின் மனதோடு ஒன்றும்படி சிறப்பாக பகிர்ந்து கொண்டார் பெனிட்டா.
archiving labour at Spaces

கல்லூரி நாட்களில் மறைக்கப்பட்ட ஜன்னல் கண்ணாடியில் பிடிபட்ட தன் பிம்பத்தை பதிவு செய்த முதல் படைப்பு முதல், ArtChennai யில் பங்கு பெற்ற சிற்ப படைப்புகள் வரை, என தன் பயணத்தை அதன் பாதிப்புகளுடனும் திறந்த மனதுடனும், ஒரு மூத்த சகோதரி தன் இளவல்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் வாஞ்சையுடன் இனிய தமிழில் எளிமையாக அமைந்த அவரது உரை, நிச்சயம் சென்னையின் கலை வரலாற்றில் அது ஏற்படுத்திய ஆழ்ந்த தாக்கத்திற்காக காலத்துக்கும் பேசப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
http://gallerysoulflower.com

பெனிட்டாவின் தொடக்க கால ஓவியங்கள் அவரது தனிமை உள்ளத்தை படம் பிடித்து காட்டுபவையாக உள்ளன. தனிமையில் அவருக்கு உற்ற தோழியாக நின்ற ஒரு இலவம்பஞ்சு மரம் அதன் பஞ்சுக் கொட்டைகளாக, கொட்டைகளின் கூடாக, பெனிட்டாவின் ஓவியங்களிலும் பிற படைப்புகளிலும் தொடர்ந்து பயணித்து வருகிறது. பெனிட்டாவின் வாழ்வில் பெரிதும் பாதித்த இந்த இலவம்பஞ்சுக் கொட்டைகூடு, பின்னாட்களில் அவருக்கு உற்ற தோழமையாக அமைந்த ஜெர்ரி என்ற அணில் குஞ்சும், ஜானி என்ற நாயும் அவரது படைப்புகளில் பிரதான இடம் பெறுகின்றன.
gallery soul flower 

பெனிட்டா தன் ஓவியங்களுக்கு கடுமையான செயற்கை வண்ணங்களைத்  தீட்டுவதில்லை. தேயிலை, காப்பி, இவற்றின் கரைகள் மற்றும் இயற்கை தாவர மற்றும் கனிம வண்ணங்களையே தீட்டுகிறார். இயற்கையோடும் நிலவுகின்ற சூழலோடும் இயைந்த இந்த அம்சம் அவரது பயணத்தில் மேலும் பலவாறு பரிணாம வளர்ச்சி அடைந்து, பெனிட்டாவின் படைப்புகளின் தனி முத்திரையாகவும் அவரது மனப்பாங்கு மற்றும்  கலை செயல்பாட்டின் ஆதாரமாக அமைகின்றது.

பெனிட்டாவின் ஓவியங்கள் கவனம்பெற, அவர் டெல்லிக்கு கோஜ் என்ற அமைப்பில் தங்கி ஓவியம் படைக்க அழைக்கப்படுகிறார். அங்கும் தனது அறையின் அருகாமையில்அமைந்திருந்த மகிழ மரத்தில் கட்டியிருந்த தேன்கூடு பெனிட்டாவின் மனதை பெரிதும் கவர்கிறது. அவர் கோஜில் தங்கி உருவாக்கும் படைப்புக்கும் ஆதாரமாக அந்த தேன்கூடே அமைகிறது.

ஓவியங்களிலிருந்து பெநிட்டவின் படைப்புலகம் மண் சிற்பங்கள், மரச் சிற்பங்கள் என விரிவடைகிறது. பல அயல் நாடுகளுக்குச் சென்று கலைபடைக்கும் வாய்ப்புகளும் வந்த வண்ணம் இருக்கின்றன. கலை மொழியும் களமும்  விரிவடைந்தாலும் அவரது படைப்புகள் தன் தனிமையைக் குறித்த ஜபங்கலாகவே அமைகின்றன.
இந்தச் சூழலில் பெனிட்டாவின்  2008 இலங்கை பயணம் ஒரு பெரும் திருப்புனையாக அமைகிறது. தன் வலியையும் தனிமையையும் மீறி உலகியல் நடப்புகள் பெனிட்டாவை பெரிதும் பாதிக்க ஆரம்பிக்கின்றன, இந்த முக்கியமான இலங்கை பயணத்தின் குறியீடாக கிராம்பு பெனிட்டாவின் படைப்புகளில் சிறப்புப் பெறுகிறது.
@ Kochi

இவ்வாறாக தன்னை சுற்றியுள்ள, தன்னை பாதித்த விஷயங்களைக் கொண்டே பெனிட்டா எங்கு சென்றாலும் தனது படைப்புகளை உருவாக்குகிறார். ஒரு புதிய சூழலில், அயலூரில்  கூட்டுக்காட்சியில் பங்கேற்கிறார் என்றால், அவர் படைப்பைப் பற்றி எந்த முன் தீர்மானமும் இன்றி சென்று, அங்கு தன்னை பாதித்த மற்றும் அங்கு கிடைக்கும்பொருட்களைக் கொண்டு படைப்புகளை உருவாக்குவது அவரது பாணி. இதனால் அவரால் பல முறை கூட்டுக்காட்சியின் ஆதார கருத்தின் அறிவிப்போடு ஒன்ற முடியாமல் போய்விடுகிறது,

பெனிட்டாவின் ஓவியம் மட்டுமல்லாது சிற்பங்களும் சிறப்பாக கவனம் பெற்றுள்ளன. சீனாவில் அவர் அகர்பத்திகளைக் கொண்டு வடிவமைத்த வட்டக்கோட்டை மாதிரியான சிற்பம் சிறப்பு கவனம் பெற்றது. பெனிட்டா தன் சிற்பங்களுக்கு ஓர் அசைவுத்தன்மை கொடுத்து விடுவதில் குறிப்பாக இருந்து, அவற்றுக்கு உயிர் புகுத்தி விடுகிறார். மரப்பசை கொண்டு அவர் செய்யும் சிற்பங்கள் காலப்போக்கில் உருமாறுவதன் மூலம் உயிர் 
கொள்கின்றன. அவரது சிற்ப செயல்பாட்டின் முத்தாய்ப்பாக ராஜஸ்தானில் சிற்பக்கலைகூடமாக உரு மாறியுள்ள ஒரு அரண்மனையில் பங்குக்கொள்ள உலகளவில் அழைக்கப்பட்ட வெகு சில கலைஞர்களில் பெனிட்டாவும் ஒருவர் என்பது தமிழகம் பெருமையாக கருதவேண்டிய விஷயம்.
@ sculpture park 

பெனிட்டா இந்த பயணத்தின் மூலம் இறுக்கமானவாராக, தன் சூழலின் மீது தாய்மை அக்கறை கொண்டவராக, இயற்கையின் மீது தீரா காதல் கொண்டவராக, நம் வணக்கங்களுக்கு உரியவராக வளர்ந்து நிற்கிறார்.

No comments: