Wednesday, March 27, 2019

To-let film

ஊடகங்களில் பரவலாகப்  பேசப்பட்டதாலும், படத்தின் இயக்குனர்  செழியன் இலக்கிய தளத்திலிருந்து வந்தவர் என்பதால் அவரிடமிருந்த அன்பினாலும் To - let படத்தை பார்த்தே ஆக வேண்டிய ஒரு சூழல் உருவாயிற்று. படம் வெளியாகி பல நாட்கள் கழித்தே  , பார்க்கும் வாய்ப்பு அமைந்தது, ஆர்வத்துடன் சென்றேன். மிகுந்த ஏமாற்றமே.

ஒன்றரை மணி நேரமாக (நல்ல வேலையாக அத்துடன் முடித்துக்கொண்டார்கள் ) இரு மன நோயாளிகளுடன் ஒரே வீட்டில் அடைப்பட்டுவிட்டது போன்ற உணர்வே மிச்சம். கதையையும் பாத்திரங்களையும் அவற்றின் போக்கில் இயல்பாக உரு பெறுவதை சிதைக்கும் விதமாக அமைந்துவிடுகிறது இயக்குனரின் பாவனை. அந்தப் பெண் நடிகரை ஏன் அப்படி ஒரு பிரமை பிடித்தவர் போன்று சித்தரித்துள்ளாரோ செழியன். அந்த நடிகையின்  அழகான முகமும் திறனும் இயக்குனரின் சித்தரிப்பில் சிதைந்து போய்விடுகின்றன.

நடிகர்கள் அனைவரும்  ஒரு  குறிப்பிட்ட scales க்குள்ள தான் பேசணும், நடிக்கணும்  என்று நிர்பந்தம் செய்யப்பட்டவர்கள் போல் மந்தமாக காணப்படுகிறார்கள், எல்லாருமே ஏதோ அளவாக பேசி நடித்துவிட்டு செல்வது அலுப்பு தட்டுகிறது. நடிகர்களின் இயல்பான நடிப்புக்கு வழிவிடாமல் இல்லோரையும் ஒரு சட்டகத்துக்குள் வகுத்து நிறுத்துவது நமக்கு எரிச்சலை மூட்டுகிறது . இந்த வரையறை சூழலிலும் மிளிர்பவர் அந்த வீட்டுத் தரகர், அவரது இயற்கையான வசனங்கள் மூலம் நம்மை கவர்கிறார்.

பாத்திரங்களில் கொஞ்சம் இயல்புத் தன்மைக்கு அருகாமையில் வருபவர் அந்த சேட்டு காரெக்டர். அவரும் கடைசியில் 'தமிழ் ஆளுங்க நமக்கு புதுசு' என்று சொல்வதின் மூலம் சொதப்பிவிடுகிறார்.

 ரவிசுப்பிரமணியம் திரையில் தோன்றும் இடங்களில் நன்கு காட்சியை கவரும் விதமாக தோன்றுகிறார். ஆனால் அவரை ஒரு ஓரமாக சென்றுவிடச்  சொல்கிறார் இயக்குனர். நல்ல scope உள்ள ஒரு பாத்திரமும் நடிகனும் வீணடிக்கப்படுகின்றனர்.

செழியன் உலக சினிமா ரசிகர் என்பதால் அவரது ரசனையை பறைசாற்றும் விதமாக  பல குறியீட்டுக் காட்சிகளை அமைத்துள்ளார். ஆனால், அவற்றை ரசிக்கும் நிலையில் காண்பவர் இல்லை என்பது துரதிர்ஷ்டமே.

படம் எப்படியாவது மீண்டு விடாதா, துலங்கி விடாதா என்ற ஆவலுடன் கொஞ்ச நேரம் சென்றது, பின்பு எப்ப தான் முடிப்பார்கள் என்ற ஆவலில் நாம் திரை அரங்கிலிருந்து மீண்டு வெளியேறுவதாக அமைந்தது இந்த பன்னாட்டு விழாக்கள் கண்ட பரிதாபம்.

No comments: