Saturday, June 15, 2019

தியேட்டர் நிஷா- உருபங்கம் நாடகம்

தியேட்டர் நிஷா-  உருபங்கம் நாடகம்

தியேட்டர் நிஷா சென்னையில் இயங்கிவரும் நாடகக்  குழுக்களில் ஒன்று. இக்குழுவைப் பற்றி அறிமுகம் செய்யும் வேளையில், சென்னையில் இயங்கி வரும் பிற குழுக்களைப் பற்றியும்  ஒரு சிறு அறிமுகம் செய்ய இது ஒரு நல்ல தருணமென தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட தளத்தில், அதாவது தியேட்டர் நிஷா இயங்கும் தளத்தில் இயங்கும் பிற குழுக்கள் என் நான் கண்டும் கருதும் சில குழுக்களை மட்டும் இங்கே காணலாம்.

இக்குழுக்களை நான் 'காஸ்மோ' குழுக்கள் என்று அழைக்கிறேன். இவை தமிழ் மண்ணில் வேரூன்றி இருந்தாலும் இவற்றின் பார்வை, அழகியல்,  மற்றும் இயங்கு முறை உலகலாவியதாக உள்ளன. ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு அடையாளம் இருப்பதாக நான் கருதுகிறேன். துஷ்யந்த் குணசேகரின் கிரியா குழுவின் நாடங்களில் சிறந்த மேலாண்மை இருக்கும். இளையதலைமுறையின் ரசனைகளுக்கு தீனி போடும் விதமாகவும், அவர்களை சுண்டி இழுக்கும் அம்சங்கள் நிறைந்ததாகவும், வணிக நோக்கில் விளம்பரங்கள், பரப்புரைகள் என்ற சிறந்த கட்டைமைப்புடனும் கிரியாவின் நாடகங்கள் அரங்கேறுவது ஒரு தனிக்  கலை. மேலும் கிரியா, பல கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் என்றும், பிற குழுக்களுடன் கூட்டு முயசிற்ச்சிகள் என்று நாடகம் குறித்த ரசனையை, திறமையை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. ராஜிவ் கிருஷ்ணனின்  பெர்ச் குழுவின் நாடகங்கள் இலக்கிய அம்சங்கள் நிறைந்தவையாக, ஆழ்ந்த கருத்துக்களை  இலகுவான தளங்களில் பதித்து செல்பவையாகவும்  உள்ளன. மேஜிக் லன்டர்ன் குழுவினரின் நாடகங்கள் அனைத்து தொழில்நுட்ப வகையிலும் சிறந்த முறையில் செப்பனிடப்பட்டவையாக, ஒரு திரைப்படத்திற்குரிய  நேர்த்தியுடன் அமைந்தவை, நிகழ்த்து முறையில் பல சோதனைகளை தொடர்ந்து செய்துவரும் குழு இது. தியேட்டர் ஸிரோ வின் நாடகங்கள் நம்மை வயிறுகுலுங்க சிரிக்கவும், மனம் துளிர சிந்திக்கவும், நிகழ்த்துக்கலையின் சாத்தியங்களால் நம்மை மெய்மறக்கச்  செய்பவை. காஸ்மோ குழுக்களில் முன்னோடியென்று கருத்தக்கூடியவர்கள் மெட்ராஸ் ப்லயேர்ஸ். இவர்களது நாடகங்கள் ஒரு வித பிராட்வே அழகியலை மென்னுணர்வுகளைப் பறைசாற்றுவதாக இருக்கும்.

இந்த  காஸ்மோ தளத்தில், தியேட்டர் நிஷாவின் நாடகங்கள் சற்றே தீவிரத் தன்மை கொண்டவை. புராணங்கள் (பெரும்பாலும் வடமொழிப்  புராணங்கள்) மீதும் அவற்றின்  நாயகர்களின் காவியத்தன்மையை மிகைப்படுத்துவதன்  மீதும் பெரிதும் மோகம் கொண்ட குழு என்று கூறலாம். இந்திரா பார்த்தசாரதியின் அவ்ரங்கசீப் நாடகத்தை நிஷா குழுவினர் அரங்கேற்றிய போது பார்வையாளரின் மனம் பெரிதும் கதை மாந்தர்களின்  உருவாக்கத்தின்பால் லயித்தபடி இருக்கும், இதுவே இன்னொரு குழுவின் அரங்கேற்றத்தில் அந்த நாடகத்தில் சொல்லப்படும் அரசியல் கருத்துக்களின் பால் லயிக்கும்.
தியேட்டர் நிஷாவை தோற்றுவித்த பாலா அதன் முதுகெலும்பு என்றால் அவர் தோற்றி வளர்த்த இந்தக் குழுவின் இளம் நட்சத்திரங்களை இந்த உருபங்கம் நாடகம் மூலம் ஜொலிக்கக் கண்டது, மற்றும் இக்குழுவின் பிரதான அங்கமான சக்தி ரமணி இயக்குனராக மலர்ந்து ஜொலிக்கக் கண்டது இன்றைய நிகழ்வின் முத்தாய்ப்புகள்.

முதன்  முறையாக சக்தி ரமணியின் மேடைத் திறனை நான் நேர்காண முடிந்தது  ஒரு குருநாடக விழாவில், ( 2016 இல் என்று நினைவு )அவர் அரங்கேற்றிய, தீவிர உடல்அசைவுகள் மேலோங்கிய நிகழ்த்து பாணி நாடகத்தில் மூலம் தான். இன்றும் அந்த நிகழ்வதிர்வின்  நினைவுகள் ஒரு தகிக்கும் ஜோதியாய் என் மனதில் ஒளிர்விடுகிறது. அன்று முதல் அவரது செயல்பாடுகளைத்  தொடர்ந்து கவனித்த வண்ணம் இருந்துள்ளேன். இன்றவர் இயக்குனராக மலர்கிறார் என்ற செய்தி மிகுந்த ஆவலைத் தூண்டியது. முதல் நாள் முதல் கட்சியே பாஸாவின்  உருபாங்கம் மேடையேற்றத்தைப் பார்க்க சென்று விட்டேன்!

நாடகத்தின் களம் என்னவோ நிஷா குழுவினரின் வழமையான வடமொழிக் காவியம், நாயகனின் தீரத்தின் மிகைச் சித்திரமென்று விரிந்தாலும் சிறு சிறு புது உத்திகள் புது அனுபவத்தை தந்தன.
குறிப்பாக நாடகத்தின் தொடக்கத்திலிருந்தே ஒலிக்கத் தொடங்கும் விஷ்வா பரத்தின் தப்பொலி நாடகத்தின் ஒவ்வொரு கனத்தையும் மெருகேற்றியபடி கூடுதல் ஜீவன் சேர்த்தபடி வளர்கிறது.
விஷ்வா பரத்தின் நடனமைப்பு , ஒயிலாட்டத்தின் அசைவுகளை நினவுப் படுத்தின அவை நாடகத்தின் நிகழ்த்துமுறைக்கு கூடுதல் தீவிரத்தையும் தொடர்ந்து கவனத்தை ஈர்க்கும் ஒரு வேகத்தையும் தந்தன.

நான் கண்ட பிரதி காட்சியில் ஒளி அமைப்பு பல இடங்களில் சரிவர அமைக்கப்படவில்லை. பல நேரங்களில் நடிகர்கள் இருட்டில் நடிக்கும்படி ஆயிற்று .

நாடகத்தில் வடமொழி, தமிழ், ஆங்கிலம் என்று மூன்று மொழிகள் கையாளப் பட்டுள்ளன. அங்கிலத்தை தவிர்த்து தமிழையே ஆங்கிலப் பகுதிகளிலும் கையாண்டிருக்கலாம் . அது நாடகத்தின் உணர்ச்சி தீவிரத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கும் என்று தோன்றியது. ஆங்கில பிரயோகம் அந்த உணர்ச்சியோட்டத்தோடு சிறிதும் ஒட்டவில்லை.

 வடமொழி பிரயோகம், இசையோடும் , நிருத்தங்களோடும்  சிறப்பாக கை  கூடியுள்ளது இந்த நாடகத்தின் வெற்றிகளில் ஒன்று.

ஒவ்வொரு நடிகரும் தன் பங்கை மிகச் சிறப்பாக நிகழ்த்தியிருந்தார். எந்த ஒரு நடிகரைமட்டும் தனித்து குறிப்பிடுவது மிகவும் கடினம். துரியனாக பாலாவும், அஸ்வத்தாமாவாக சக்தியும் மிளிர்வதை குறிப்பிடாமல் விடுவதும் கடினம்.  அந்த அளவுக்கு ஒருவரை ஒருவர் மிஞ்சும் விதமாக சிறப்பாக நடித்திருந்தனர்.

இருப்பினும் ஓரிரு நட்சத்திரங்கள் அவை வானில் புதியன என்ற அளவிலும், அவற்றின்  தனி துடிப்பாலும்  கவனத்தை  ஈர்த்தன.

காட்சி அமைக்கப்பட்ட உடல் அசைவுகளுக்கு ஒரு நடிகரின் உடல் வாகு பொருந்தாத போதும், உடல் வாகு கை கொடுக்கத்  தவறியதை மனதின் தீரம், மற்றும் கீர்த்தியின் வலிமைக்  கொண்டு சமன் செய்து பிற நடிகர்களுடன் இணை செய்த ஒரு நடிகர் என் மனம் கவர்ந்தார்.
தால ஒலி தொடையில் தட்டி எழுப்ப வேண்டிய காட்சியில், ஒலி கூடுதல் வரும் பொருட்டு தன் தொடைமறைக்கும்  ஆடையை விலக்கி தாலம் தட்டி சீரொலி எழுப்பிய நடிகரின் ஈடுபாடும் பிரயத்தனமும் என்னை வெகுவாகக் கவர்ந்தன.
காந்தாரியின் வேடம் அணிந்தபெண்ணுக்கு அமைக்கப்பட்ட நீளமான துகில்களுடன் கூடிய நடன அமைப்பு ஒரு தனிச் சிறப்பு.

இந்தப் புதியவர்களின் பெயர் அறிய ஆவல் கொண்டு நாடக முடிவில் வழமையாகச் செய்யப்படும் கலைஞர்கள் அறிமுகத்திற்க்காக காத்திருந்தால்,
பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. நிஷா குழுவினர் இந்த வழமையைக் கைக்கொள்வதில்லையாம்!!
 இது தவறானது. புதுமை செய்கிறோம் என்று பார்வையாளர்களை இருட்டில் விட்டுவிடுகிறார்கள். கலைஞர்களின் அறிமுகத்துடன் மட்டுமே ஒரு நாடக நிகழ்வு முழுமைப் பெற முடியும். பாலா, சக்தி, மீரா போன்ற கலைஞர்களுக்கு அறிமுகம் தேவைப்படாது, ஆனால் புதியவர்களை அறிமுகம் செய்யாமல் விடுவது அவர்களுக்கு இழைக்கப்படும் ஒரு வித அநீதியாகத்  தோன்றுகிறது.

துரியனின் மனதை விளக்க முனையும் நாடகத்தின் ஆசிரியர் பாஸா , பாண்டவர்களையும் கிருஷ்ணனையும் தனி பாத்திரங்களாக படைக்கும் அவசியமில்லாமலே நாடகத்தில் அவர்களின் சுவடுகளை ஆழப் பதியச் செய்வது, ஆசிரியன் வெற்றி காணும் இடங்கள்.

தொடர்ந்து நல்ல காவியங்களையும், புதுக் திறமைகளையும் நமக்கு அறிமுகம் செய்யும் நிஷா குழுவினருக்கு வாழ்த்துக்கள். 

No comments: