Monday, October 21, 2019

பெர்ச் ன் சிறகை விரி

சென்னையின் நாடகச் சூழலில் தீவிரத்துடனும் வீரியத்துடனும் இயங்கும் குழுக்களில் ஒன்றான பெர்ச் குழுவினரின் முயற்சியில் ‘சிறகை விரி’ என்ற புதிய கலைப் படைப்புகளை ஊக்குவிக்கும் திட்டம் சென்னையின் கலை வானில் புதிய வண்ணம் பாய்ச்சும் , புதிய வேகம் மற்றும் உற்சாகம் சேர்க்கும் முயற்சியாக வளர்ந்து வருவது நம் நகரத்திற்கு வாய்த்த பெரும்பேறு.


இம்முயற்சியில் ஓவியம், நாடகம், நடனம், புகைப்படம், குறும்படம், எழுத்து என்று எந்த ஒரு கலை படைப்பிற்கான மூலக் கருத்தையும் முன் வைத்து விண்ணப்பங்கள் அனைவரிடமிருந்தும் எந்த வயது/ தகுதி வரம்புகளின்றி வரவேற்கப்படுகிறது . அவற்றிலிருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்டு அந்தக் கருத்து, முழு கலை வடிவம் பெற்று உருவாகிட பெர்ச் குழுவினர் உதவித் தொகையாக ரூபாய் 30000 தந்து ஊக்குவிக்கின்றனர் .

இம்முயற்சியின் இராண்டாம் வருடத்தில் பெறப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 7 கலை படைப்பின் வித்துக்கள் பெர்ச் குழுவினரின் பொருள் மற்றும் தார்மிக ஊக்குவித்தலுடுன் சிறந்த படைப்புகளாக உரு பெற்று பார்வையாளர்கள் முன் சென்னை கதே இன்ஸ்டிட்டியூட்டில்படைக்கப்பெற்றன. இப்படி உருவான படைப்புகளில் மின்னிய வீரியம் மற்றும் திறன் பிரமிக்க வைப்பதாக இருந்தது. அவற்றைப் பற்றி இங்கே உங்களுடன் பகிர்ந்துக்கொள்ள விழைகிறேன்.

முதலில் ‘சிறகை விரித்த‘ பிரேமா ரேவதியின் ‘ ஒரு கொடடும்  அழகு ‘ என்ற ஓராள் நாடகம், முற்போக்கான பெண்ணிய கருத்துக்களை மிகவும் எளிய மேடை அமைப்புகள், எளிய வஸ்துக்களின் திறன்மிகு பிரயோகம், மேடையைப் பிரித்து புதிய பரிமாணங்கள் செய்வது, உடல் மொழியில் கூர்மை, வசனங்களில் கவித்துவம், அசைவுகளில் நாடகீயம் என்று நவீன நாடக உத்திகளுடன், கலைஞரின் முதல் முயற்சி என்று நம்புதற்கரிய விதத்தில் அரங்கேறியது.

கோடு , வட்டம், சதுரம் என்ற புனை மொழியின் ஊடே பெண்ணியம் எதிர்கொள்ளும் கட்டுப்பாடுகளையும், அடக்குமுறைகளையும், சுதந்திர உணர்வின் வேட்கையையும் அழகுடன் இயம்பிச் சென்றது பிரேமா ரேவதியின் நெறியாக்கம். ‘இழப்பதற்குக்  கை விளங்குகளைத் தவிர வேறொன்றும் இல்லை, வென்றிடவோ ஒரு பொன்னுலகம் உண்டு ’ என்ற கருத்துக்கள் தோய்ந்த பெண்ணிய வேட்கையின் சித்தரிப்பின் நடுவே, ஆண் மைய அடக்குமுறையைக்  கொன்றழித்து, அதன் இரத்தம் தின்னும் , கொய்த சிரங்களைக் கழுத்தில் மாலையாகத்  தரிக்கும் காளியை உருவகம் செய்யும் காட்சி அமைப்பு , பிரேமா ரேவதியின் பெண்ணிய சிந்தனையில் ‘காளி ’ தான் ‘ ஒரு கொடும்  அழகாக ‘ உருவகம் பெருகிறாளோ என்று எண்ணம் தோன்றுகிறது.
பிரேமா ரேவதியின் நடிப்பில் சிறந்த பிரயத்தனம் தெரிந்தது. ஒரு காட்சியில் கையில் எதோ ஏந்திய படி பாவனை செய்யும் பிரேமா, அடுத்த காட்சிக்கு நகரும் முன் கையில் இருந்ததை ஒரு பாத்திரத்தில் வைக்கும் பாவனை செய்து அடுத்த காட்சிக்கு நகர்ந்த பாங்கு, அவர் காட்சியின் ஓட்டத்துடன் ஒன்றியிருக்கும்  பாங்கு வியக்கச் செய்தது.
பிரேமா ரேவதியின் கணவர் நடராஜன் ஒரு ஓவியர். அவரது ஓவியங்கள் இரண்டு, மேடையை அலங்கரித்து இருந்தன. நாடகத்தின் ஒளி ஒலி அமைப்பு சிறப்பாக நெறியாளப்பட்டிருந்தது.
படைப்புகள் பெரும்பாலும் இன்னும் முழுமை பெறாத வடிவங்களில் அரங்கேறுவதால்,  பார்வையாளர்களிடமிருந்து படைப்பை மேலும் மெருகூட்ட கருத்துக்கள் வரவேற்க்கப்பட்டன . இது  ஒரு  சிறந்த செயல்பாடாகும்,  பார்வையாளனுக்கும் படைப்புக்குமான தொடர்பை மேலும் ஆழம் செய்யும்.  என்னளவில், மதுராந்தகம் பகுதியில் வெள்ளப்பெருக்கின் அனுபவம் என்று விரியும் ஒரு சிறு பகுதி நாடகத்தின் மைய ஓட்டத்துடன்  ஒட்டாமல் இருந்ததைப் படைப்பாளியிடம் எடுத்துக்கூறினேன் .

இரண்டாவது படைப்பு பத்மபிரியா என்ற நுண்கலை மாணவியின் புகைப்படங்கள் மற்றும் ஓவியங்கள் வழி பெண்கள் மேற்கொள்ளும் தனி பிரயாணங்கள் பற்றிய அனுபவங்கள் மற்றும் விசாரங்களின் பதிவாக அமைந்தது. பத்மபிரியா தனி பிரயாணங்கள் பற்றிய தனது தனிப்பட்ட மன அழுத்தங்களை நேற்கொள்ளும் மற்றும் கேள்விக்குட்படுத்தும் ஒரு சுய பரிசோதனை முயற்சியாக இந்த படைப்பை அணுகிய விதம் படைப்புக்கு ஒரு புதுப்  பொலிவையும் உயிர்ப்பையும் ஊட்டியது.

சம்யுக்தாவுடனான அறிமுக உரையாடலின்போது பத்மபிரியா வெளிப்படுத்திய நேர்மை மற்றும் எளிமை அவரது படைப்புக்கு இன்னும் வலு சேர்ப்பதாக அமைந்தது. புகைப்படப் பதிவுகள் என்ற கருத்துடன் இந்தப் பயணத்தை தொடங்கிய பத்மபிரியா , தன் முயற்சிக்கு வலு சேர்க்கும் விதமாக கோட்டோவியங்கள், வாக்கியங்கள் என்று விரிவு செய்துள்ளார். கூடுதல் முயற்சியாக பார்வையாளர்களை தங்கள் அனுபவ பதிவுகளையும் பகிரும் படி கோரியுள்ளார். அவரது படைப்பு ஒரு நல்ல குறும்புத்தகமாக மலரும் வாய்ப்புள்ளது.
படைப்பாளி, பிரதியின் வேடம் அணிந்து காட்சியில் அவதரிக்கும் பாங்கு என்பது cop Shiva , Pushpamala போன்ற கலைஞர்கள் தங்கள் படைப்புகளில் கையாளும் ஒரு உத்தி. அந்த உத்தி பத்மப்ரியாவின் இந்த முயற்சிக்கு கச்சிதமாக பொருந்திவரும் என்று எனக்குத் தோன்றுகிறது.

மூன்றாவதாக அறிமுகம் செய்யப்பட்ட முத்துவேலின் படைப்பு பொருள்வயின் இடம் பெயர்ந்த உழைப்பாளிகளின் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து அவற்றுக்கு குரல் வடிவம் தந்து சிந்தையைத் தூண்டும் நிலைப்படக்  காட்சிகளுடன்  வடிவம் தந்துள்ளது. சீன இளைஞர் ஒருவரின் காவிதையினின்று அரும்பிய முத்துவேலின் இந்த பயணம் பல புலம்பெயர் வாழ் கவிஞர்களின் கவிதை வழி கண்டுள்ளது. தற்போது தனது பார்வை தன்னைச் சுற்றியுள்ள புலம்பெயர்ந்து வாழும் சிப்பந்திகளின்பால் இடறியுள்ளது என்பது இந்தப் படைப்பு அதன் முழுமையை நோக்கி சரியாக நகர்கிறது என்பதின் அறிகுறியாகத் தோன்றியது.

முதல் நாள் மூன்று படைப்புகளும், அடுத்த நாள் பிற படைப்புகளும் அறிமுகம் செய்வது என்பது பெர்ச் குழுவினரின் நடைமுறை. என்னால் மறுநாள் வரமுடியாத காரணத்தால் பிற படைப்பாளிகளையும் முதல்நாளே கண்டுகொள்ள ஆவல் கொண்டேன்.

தக்ஷினியின் அசைவுறு ஓவியங்கள் என் கவனத்தையும் கற்பனையையும் பெரிதும் கவர்வனவாக அமைந்தன. தச்சர் உதவியுடன் தனது அரூப/ விந்தை ரூப ஓவியங்களுக்கு அசையும் தன்மை வழங்கியுள்ளார் தக்ஷினி. வினோதமான முகங்கள், மூன்று கை , மூன்று கால் கொண்ட மனிதன், அவனது சிப்பந்தி, அவனது தோழன், ட்ரோஜன் பெண்கள் அவர்களது எஜமானர்கள் , அவர்களது வாட்சண்டைகள் என்று விரிந்து கொண்டே செல்கிறது தக்ஷிணியின் படைப்புலகம். இவை சிறியவர்களுக்கு பெரிதும் களிப்பூட்டக்கூடியவை , பெரியவர்கள் சிந்தித்திடவும் தக்ஷினி இவற்றில் பல பொருள்படும்படி வடிவமைத்துள்ளார்.

காண்பியல் மொழி பயின்றுள்ள தக்ஷினி தியேட்டர் நிஷாவின்  நாடகங்களில் பங்காற்றி வருகிறார். இவர் தனது ஒவ்வொரு படைப்பையும் பார்வையாளர்களிடம் விளக்கிய பாங்கு,  ஆர்வம், ஈடுபாடு ஆகியவை , இவரிடமிருந்து சிறந்த படைப்புகள் உருவாகும் உறுதியை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

சரண் ராஜ் குவாரியில் உழைக்கும் மக்களின் வாழ்வையும் வலியையும் நம் கண் முன் காட்சிப்படுத்துகிறார் . கவின் கலைக் கல்லூரியில் தாள முத்துவின்  ஈன்றெடுக்கும் குதிரையின் சிற்பம் அதன் தத்ரூபப் பதிவிற்க்காக என்றென்றும் நம்மை பாதிக்கக்கூடியது. அந்த ஈனும் வலிக்கு ஒப்ப, ஒரு சொல்லில் அடங்கா துயரத்தை, குவாரி வாழ்க்கையின் வலியைக் காட்சி, ஒலி , மற்றும் தொடுதல் பதிவுகள் மூலம் நம் நெஞ்சில் நீங்காச் சுவடைப் பதித்துச்  செல்கிறார் சரண் ராஜ்.

நாடகக் கலைஞர் பகுவின் படைப்பு மறுநாளே அரங்கேறும் என்ற நிலையில், அந்த படைப்பை மட்டும் நழுவ விட்டேன்.

இங்கு அரங்கேறிய ஒவ்வொரு முயற்சியும் சிறிய முயற்சி என்றாலும் எண்ணம் மற்றும் நோக்கத்தில் மிக உயரிய சீரிய ஆக்கங்கள். நமது கலைச் சூழலைப் பெரிதும் பாதிக்கக்கூடிய அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியவை, ஒரு பெரும்போக்கிற்கு எதிராக தலைதூக்க முயலும் எளிய முயற்சிகள். இவற்றை மிக சிரத்தையுடன் கண்டெடுத்து ஊக்கப் படுத்தும்  பெர்ச் குழுவினர் மீது நமது நம்பிக்கையும் எதிர்ப்பார்ப்பும் பன்மடங்கு உயரச் செய்கிறது.  

2 comments:

Artist saranraj said...

சார், நான் சரண்ராஜ்.
ஈன்றெடுக்கும் குதிரை சிற்பம் எண்ணுடையது அல்ல.
தவறான தகவல்.

Artist saranraj said...
This comment has been removed by the author.