Tuesday, March 1, 2016

பினாலே வருக- Chennai Photo Biennale.

பினாலே வருக 

உலகம் எங்கிலும் கலை ஆர்வலர்களின் பெரும் மதிப்பையும் போற்றுதலையும் பெற்றுள்ள ஒரு வார்த்தை 'பினாலே' என்னும் சொல் ,  'இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை' என்ற பொருள் கொண்ட, ஒரு நிகழ்வை குறிக்கும் இந்த  இத்தாலிய  சொல், 1895 ல் தொடங்கிய, வெனிஸ் பினாலே என்னும் கலை உலகின் நட்சத்திர காட்சி நிகழ்வின் பெரும் பாதிப்பால் புகழ்பெற்றது. அதை தொடர்ந்து, இன்று உலகெங்கிலும் கலை காட்சி நிகழ்வுகள் பல ஊர்களிலும் பரவி வேர் ஊன்றியுள்ளன .

 நேற்று வரை நமக்கு அண்டையில் நடைபெற்ற 'கொச்சி பினாலே'வே இதன் சாராம்சமாக நமக்கு காட்சி தந்தது. ஆனால் இன்றோ நம் வாசலுக்கே பினாலே வந்து விட்டது. 

ஆம்!, சென்னையில் உள்ள  ஜெர்மன் கலாச்சார மையத்தின் புண்ணியத்தில்  ' சென்னை போட்டோ பினாலே' நம் பூங்கா மற்றும் ரயில் நிலையம் போன்ற பொது இடங்களையும் வந்து சேர்ந்துவிட்டது. இந்த பெரும் நிகழ்வை தழுவ நாம் எந்த அளவுக்கு தயாராய் உள்ளோம் என்பது நமது கலாச்சார அறிதல்  புரிதலுக்கு ஒரு சவால்.

சென்னையில்  சாமானியனின் புகலிடமாக விளங்குவது பூங்காக்கள். ஒரு பின் மதிய வேளையில் ஒரு பூங்காவிற்குள் சென்றால் நம் ஊர்  'மன்னார் எண்டு கம்பெனியில்' இத்தனை 'தங்க வேலுகளா'  என்று வியப்புத் தோன்றும். இப்படியுள்ள நம் பூங்காகளில் சிறப்பிடம் பெற்றது மயிலை நாகேஸ்வர ராவ் பூங்கா. இங்கே தனது 'சென்னை போட்டோ பினாலே'வின் ஒரு விரிவான தூரிகையை அமைத்து, கலை கூடங்களுக்குள் கலை பொருட்களை  பூட்டி வைக்காமல்,  முதல் பந்திலே சிக்ஸர் அடித்துள்ளனர்  சென்னை ஜெர்மன் கலாச்சார மையத்தின் தலைவர் ஹெல்முட் ஷிப்பெர்ட் மற்றும் இந்த விழா குழுவினர்.

ஆம்! சென்னை போட்டோ பினாலே வின் ஒரு அங்கமாக கலை நயம்மிக்க பல புகைப்படங்கள், அப்பாராவ், ஆர்ட் ஹௌஸ், முதலிய கூடங்களில் மட்டும் அல்லாது நாகேஸ்வர ராவ் பூங்கா, திருவான்மியூர் MRTS ஸ்டேஷன் போன்ற பொது இடங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு கலை படைப்பை சாமானியனுக்கு இத்தனை அருகாமையில் வைக்க துணிந்தது பாராட்டி  வரவேற்க்கப் படவேண்டிய முயற்சி. 

ஒரு உன்னத கலை படைப்பை, நிகழ்வை ஒரு சாமானியனின் மடியில் கொண்டு வந்து அமர்த்திவிட்டனர், வருண் க்ரோவர் முதலிய  இந்த விழா அமைப்பாளர்கள் . 

மொபைல் போன்கள் மற்றும் டிஜிட்டல் காமெராக்களின் உபாயங்களால் இன்று நம் ஒவ்வொருவர்  கை இருப்பிலும்  பலனூறு காட்சிப் படங்கள் குவிந்து இருக்கின்றன . இப்படி புகைப்படங்கள் பல்கி பரவி விட்ட காலத்தில், புகை படங்களுக்கு ஒரு நுண்ணிய கலை உணர்வை புகட்ட சரியான நேரத்தில் வந்துள்ளது இந்த ' சென்னை போட்டோ பினாலே'.

புகைப்படங்கள் எப்படி கலை பொருள் ஆகின்றன. இதை நாம் இந்த விழாவை கண்டு தெளிந்து கொள்ளலாம். ஆம், ஒரு ஒளி ஓவியமாக, அல்லது ஒரு கதை அல்லது கருத்து கூறும் விதமாக, பார்வையாளனின் கவனத்தை பறித்து, அவனை நிறுத்தி  சிந்தனையை தூண்டி, அவன் மனதில் சென்று அமரும் போது, ஒரு புகைப்படம் கலைப்பொருளாக உரு கொள்கிறது. இந்த அம்சத்தின் பரிணாமங்களை, விதவிதமான கதைகளாகவும் அனுபவங்களாகவும்  இந்த விழா நமக்கு காட்சிப் படுத்தி தருகின்றது.

மேலும், பினாலே கே உரிய பாணியில் பல நட்சத்திர கலைஞர்களை நம்மிடையே கொண்டு வந்து நிறுத்தியுள்ளது இந்த விழா. பல தேசிய விருதுகளை வென்றுள்ள நவரோஸ் கொன்றக்டோர், உலகளவில் புகழ் பெற்றுள்ள ரகு ராய் , பாப்லோ பர்தலமியோ போன்ற இந்தியர்கள் மற்றும் வளரும் நாடுகளின் பெண்களுக்கு 'கேமரா' எனும் சக்தியை கொண்டு சேர்ப்பதையே  தன் லட்சியமாக கொண்டுள்ள இருப்பத்தி மூன்று வயதே நிரம்பிய போணி சியு முதலிய வெளிநாட்டு கலைஞர்கள் மற்றும் காஞ்சி கைலாசநாதர் கோயிலை வலம், இடம் , உயர, தாழ என்று பல கோணங்களில் நம் மனம் கரைய  காட்சி படுத்தியுள்ள நம்மூர் பையன் அமர் ரமேஷ் வரை ஒரு நட்சத்திர பட்டாளம் இங்கே குழுமியுள்ளது. 

இவர்களது படைப்புகள் மட்டுமல்லாது இவர்களது கலை பயணங்கள் மற்றும் கற்றவைகளை பற்றி பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் நிகழ்வுகள் அமைக்கப் பட்டுள்ளன. நாம் இந்த அரிய விழாவினை விழித்திருந்து களி கொள்கிறோமா இல்லை  உறங்கி கழிக்கப்போகிறோமா என்பது நம் கையில் உள்ளது.

1 comment:

தியாகு said...

அழகாகக் கூறியுள்ளீர்கள். நன்று,